தமிழனை மணந்த ஸ்பெயின் நாட்டு பெண்! கலாசார முறைப்படி திருமணம்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஸ்பெயின் நாட்டு பெண்ணை காதலித்து தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தமிழகத்தின் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகரை சேர்ந்தவர் வசந்தராஜ் (29). இவர் ஸ்பெயின் நாட்டில் எம்.பி.ஏ. படித்துவிட்டு, அங்கேயே கடந்த 5 ஆண்டுகளாக தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வசந்தராஜின் தோழி மூலம் பியத்திரிஸ் என்ற இளம்பெண் அறிமுகமானார்.

மேட்ரிட் நகரை சேர்ந்த பியத்திரிஸ் (29). விமானம் ஓட்டுவதற்கான பயிற்சி முடித்துவிட்டு, அங்கு சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.

ஆரம்பத்தில் வசந்தராஜ், பியத்திரிஸ் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இந்த நிலையில் பெற்றோரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதனையடுத்து இவர்களது திருமணத்தை விருத்தாசலத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக மணப்பெண் பியத்திரிஸ் உள்பட அவரது பெற்றோர், உறவினர்கள் 29 பேர் விருத்தாசலத்திற்கு சென்றுள்ளனர்.

நேற்று இருவருக்கும் விருத்தாசலத்தில் தமிழ் கலாசார முறைப்படி திருமணம் நடந்துள்ளது. இதில் மணப்பெண் பியத்திரிஸ் பட்டுசேலை கட்டி மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார்.

அங்கு மணமகன் வசந்தராஜ், பெரியோர்கள் முன்னிலையில் பியத்திரிஸ் கழுத்தில் தாலி கட்டினார். தமிழ் கலாசார முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் ஏராளமான உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்