எஸ்வி சேகரை கைது செய்யாமல் மன்சூர் அலிகானை கைது செய்வதா? இயக்குநர் பாரதிராஜா

Report Print Kabilan in இந்தியா

தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கும் எஸ்.வி.சேகர் போன்ற நபர்களை கைது செய்யாமல், மன்சூர் அலிகானை கைது செய்வதா? என இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மீண்டும் கைது செய்யப்பட்டார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் பாரதிராஜாவும் தனது கண்டனத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘ஜனநாயக ஆட்சியில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு கிடையாது, எல்லோரும் ‘’இந்நாட்டு மன்னர்கள்’’ என்று கூறினார்கள். வெளிநாட்டில் பேச்சு சுதந்திரத்திற்கோ, கருத்து சுதந்திரத்திற்கோ ஆளும் அரசுகளோ, மற்ற யாருமோ தடைபோடுவதில்லை.

சேலம் பசுமை வழிச்சாலை பற்றி மன்சூர் அலிகான் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய பேச்சு தவறு தான். உணர்ச்சி மேலிடம் போது கோபம் வெளிப்படுவது இயல்பு.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று அவசர அவசரமாக, அவரை வீட்டிலேயே கைது செய்ய முனைந்த காவல்துறை, பெண்களை தரக்குறைவாகப் பேசி இழிவுப்படுத்தி தமிழகத்தில் குழப்பத்தையும், பிரச்சனையையும் ஏற்படுத்திய எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

உடனடியாக கைது செய்ய வேண்டிய அவரை விட்டு விட்டு, மாறாக சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து பாதுகாக்கிறீர்கள். ஒரு கண்ணில் வெண்ணெய்யும், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கும் உங்கள் ஜனநாயகம் கேலிக்கூத்தாக இருக்கிறது.

மன்சூர் அலிகானை கைது செய்வதில் காட்டிய அக்கறையை, தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கும் எஸ்.வி.சேகர் போன்ற நபர்களை கைது செய்தால், உண்மையான ஜனநாயக நாடாக இருக்கும்.

இல்லையென்றால் இவர்களால் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கப்படும் என்பதை கோடிட்டு காட்ட விரும்புகிறேன். தன் வீட்டிற்கோ, தன் சொந்தத்திற்கோ மன்சூர் அலிகான் குரல் கொடுக்கவில்லை, மக்களின் நலனிற்காகவே பேசினார்.

ஆகையால் அவரை உடனடியாக விடுதலை செய்யுங்கள். இல்லையென்றால் எஸ்.வி.சேகரை கைது செய்து, ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers