முதல் மனைவியுடன் கருணாநிதி வாழ்ந்த வீடு தற்போது எப்படி உள்ளது!

Report Print Santhan in இந்தியா

கலைஞர் கருணாநிதியின் குருவிக் கூடு என்றழைக்கப்படுவது கோயமுத்தூரில் அவர் வாழ்ந்த வீடு, அவர் வாழ்ந்த குருவிக் கூடு பற்றி தற்போது பார்ப்போம்.

திருவாரூரில் பிறந்த கருணாநிதியின் திரைப்பயணம் கோயமுத்தூரில் துவங்கியது. கோயமுத்தூர் சிங்காநல்லூரில் அண்ணா சாமி என்ற தொழிலாளிக்கு சொந்தமான சின்னஞ் சிறிய வீட்டில் தன்னுடைய முதல் மனைவி பத்மாவதியுடன் 1944-ஆம் ஆண்டு முதல் 1948-ஆம் ஆண்டு வரை வாழ்ந்து வந்தார்.

இரயிலில் பெரியாரின் குடியரசு இதழை படித்து வந்த அண்ணாசாமிக்கும், சாமியார் ஒருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட போது சாமியாரை விரட்டியடித்ததன் மூலமாக அண்ணாசாமிக்கும், கருணாநிதிக்கும் நட்பு உருவாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து வாடகைக்கு வீடு அளித்த அண்ணாசாமி, கருணாநிதிக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளார்.

சிங்காநல்லூர் அருகே இருந்த செண்ட்ரல் ஸ்டூடியோவில் பணியாற்றிய போது திரைப்படங்களில் வசனம் எழுதும் வாய்ப்பு கருணாநிதிக்கு கிடைத்துள்ளது.

இங்கிருந்த போது தான் ராஜகுமாரி, அபிமன்யு உள்ளிட்ட படங்களுக்கு வசனங்களை எழுதி வந்தார்.

அதற்கு பிறகு சென்னை வந்த கருணாநிதி அனல் பறக்கும் வசனங்களால் திரையுலகில் புகழின் உச்சத்திற்கு சென்றார்.

அரசியலிலும் பெரும் தலைவராக உருவெடுத்தார். இருப்பினும் தனது ஆரம்பகாலங்களை குறிப்பிடும் போது, அண்ணாசாமியின் உதவிகளையும், குடியிருந்த வீட்டையும் நினைவு கூற மறந்ததே இல்லை.

கருணாநிதி வாழ்ந்த அந்த வீட்டில் தற்போது அண்ணாசாமியின் இளைய மகன் ராஜமாணிக்கம் மனைவி இந்திராராணி வசித்து வருகின்றனர்.

கருணாநிதியின் இளமை கால புகைப்படங்கள், மனைவி பத்மாவதியுடன் இருக்கும் புகைப்படம், அண்ணாசாமிக்கு கருணாநிதி தன் கைப்பட எழுதிய கடிதங்கள் இந்த வீட்டில் சாட்சியங்களாக உள்ளன.

கருணாநிதி தங்கள் குடும்பத்திற்கு அனைத்து விதங்களிலும் உதவி செய்துள்ளதாக அந்த வீட்டில் தற்போது இருக்கும் ராஜமாணிக்கம் கூறியுள்ளார்.

ஐந்து முறை தமிழக முதலமைச்சர், 60 ஆண்டுகால சட்டமன்றத் தலைவர், 50 ஆண்டுகால திமுக தலைவர் என்று பல அரிய சாதனைகள் எட்டிய கருணாநிதியின் திரைவாழ்க்கை இந்த வீட்டில் இருந்தே துவங்கியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்