பொலிஸ் வாகனத்திலிருந்து கிழிந்த சட்டையுடன் இறங்கிய கருணாநிதி: மறக்க முடியாத சம்பவம்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை பதவியேற்றவர் திமுக தலைவர் கருணாநிதி.

உடல்நலக்குறைவு காரணமாக அவர் இன்று மாலை 6.10 மணியளவில் உயிரிழந்தார்.

இந்திய அரசியலில் முக்கியம் வாய்ந்த தலைவராக கூறப்படும் கருணாநிதியின் சாதனை எண்ணற்றறது.

அவரது அரசியல் வாழ்வில் நடந்த சம்பவம் இதோ,

2001-ஆம் ஆண்டு சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்ததாக கைது செய்யப்பட்ட போது,சென்ட்ரல் சிறை வாசலில் தரையில் அமர்ந்து கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது அவரது அரசியல் வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணமாகும்.

திமுக ஆட்சியில் சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்ததாக கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி நள்ளிரவு கருணாநிதி அப்போதைய அதிமுக அரசால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் உடனே நீதிபதி அசோக் குமார் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆஜர் செய்யப்பட்டார்.

தொடர்ந்து நடந்த கடும் வாக்கு வாதங்களுக்குப் பிறகு ஜூலை 10-தேதி வரை கருணாநிதியை ரிமாண்டில் வைக்க வேண்டும் என்றும், கருணாநிதியின் குடும்ப டாக்டர் கோபால் தவிர, அரசு டாக்டர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து அவரது உடல்நிலையை உடனடியாகச் பரிசோதிக்க வேண்டும் என்பதால், அவரை சென்னைப் பொது மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதி அசோக் குமார் உத்தரவிட்டார்.

ஆனால் நீதிபதியின் உத்தரவுக்கு மாறாக பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் கருணாநிதி நேரடியாக சென்னை மத்தியச் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அத்துடன் சிறை வளாகத்தை பத்திரிக்கையாளர்கள் உட்பட யாரும் நெருங்க முடியாதபடி மேலே இருந்த பாலத்திலேயே அத்தனை பேரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

போலீசாரின் காருக்குள்ளிருந்து லுங்கியும் கிழிந்த சட்டையுமாக இறங்கிய கருணாநிதி, பாலத்தின் மேல் குவிந்து நின்ற பத்திரிகையாளர்கள் மற்றும் பொது மக்களைப் பார்த்து மெதுவாக கையசைக்கிறார்.

பின்னர் நீதிபதி உத்தரவுப்படி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படாமல், இங்குகொண்டு வந்ததற்கு நீதி கேட்டு, அங்கேயே உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சொல்லி விட்டு சிறையின் முன்பிருக்கும் சிமென்ட் தளத்தில் அப்படியே சப்பணமிட்டு அமர்ந்து விட்டார்.

உடனேயே ஒட்டுமொத்த போலீஸ் அதிகாரிகளும் அவரைச் சூழ்ந்து கொண்டு வாக்குவாதம் செய்தனர். இந்த வாக்குவாதம் சுமார் அரை மணி நேரம் நீண்டது. ஒருவழியாக அரை மணி நேரத்திற்குப் பிறகு, மத்திய சிறைக்குள் கருணாநிதி கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்