பிட்காயின் எனக்கூறி மோசடி: வெளிநாடு தப்ப முயன்ற பெண் விமான நிலையத்தில் கைது

Report Print Arbin Arbin in இந்தியா

வாவ் காயின் எனப்படும் இ-காயின் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்துவிட்டு, தலைறைவாக இருந்த பெண் மலேசிய நாட்டிற்கு தப்ப முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்தவர் இந்திராணி. இவருக்கு பேஸ்புக் மூலமாக அறிமுகமான மாதேஷ் என்பவர், பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சியான வாவ் காயின் வர்த்தகத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அண்ணாநகரில் வசித்து வரும் பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலு, ஆர்த்தி, கிளைண்ட் ஜோசப் ஆகியோர், இணையத்தில் வாவ் காயினில் முதலீடு செய்ய உதவுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

மட்டுமின்றி 10 ஆண்டுகளில் முதலீட்டுத் தொகையின் மதிப்பு ஆயிரம் மடங்காக உயரும் என ஆசையைத் தூண்டியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, தனது வங்கிக்கணக்கிலிருந்து ஓன்லைன் மூலம் 18 லட்ச ரூபாய் பணத்தை மொத்தமாக சீனிவாசலு உள்ளிட்டோர் நடத்தி வரும் நிறுவன வங்கிக் கணக்கிற்கு இந்திராணி மாற்றியுள்ளார்.

மட்டுமின்றி 6 மாதத்தில் முதலீடு செய்த 18 லட்ச ரூபாய் திரும்ப கிடைக்கும் என கூறிய நிலையில் பல மாதங்கள் கடந்த பின்னரும் அந்தப் பணம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதன் பின்னர் விசாரித்த போதுதான் இந்திராணியிடமிருந்து பெற்ற பணத்தை எந்த கிரிப்டோ கரன்சியிலும் முதலீடு செய்யாமல் அவர்கள் ஏமாற்றியது தெரியவந்தது.

பணத்தை திரும்ப கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் சென்னை, அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திராணி தொடர்ந்த மனுவில், வழக்குப்பதிவு செய்ய அண்ணாநகர் பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து மோசடி தொடர்பான பிரிவின் கீழ் பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலு, ஆர்த்தி, கிளைண்ட் ஜோசப் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த மூவரையும் அண்ணாநகர் காவல்நிலைய பொலிசார் தேடி வந்தனர்.

மேலும், விமான நிலையங்களில் தப்பி செல்லாத வண்ணம் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியா தப்பி செல்ல முயன்ற பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலுவை அடையாளம் கண்ட குடியுரிமை அதிகாரிகள் அண்ணாநகர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அண்ணாநகர் பொலிசார், வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தலைமறைவாக உள்ள இரண்டு பேரையும் தேடி வருகின்றனர். கிரிப்டோ கரன்சி இந்தியாவில் தடை செய்யப்பட்டிருப்பதால், அதில் முதலீடு செய்து பணத்தை இழக்க வேண்டாம் என தமிழக பொலிசார் எச்சரித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்