ஏழு தமிழர்களின் விடுதலை.. அமித்ஷாவை சந்தித்த பின் அற்புதம்மாள் கூறியது என்ன?

Report Print Kabilan in இந்தியா

மீண்டும் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளதாக, ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சரை சந்தித்த அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை விவகாரம் தொடர்பாக, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், தொல்.திருமாவளவன் ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இதுதொடர்பான வீடியோவும் வெளியானது. இந்நிலையில் அமித்ஷாவை சந்தித்த பின்னர் பேசிய அற்புதம்மாள் கூறுகையில்,

‘பேரறிவாளனை பொறுத்தவரை குற்றமற்றவர் என்ற பிரமாண வாக்குமூலத்தை விசாரணை அதிகாரி அளித்துள்ளார். அப்போதே பேரறிவாளன் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்த்தேன், ஆனால் நடக்கவில்லை. 10 மாதங்களாகியும் ஆளுநர் கையொப்பமிடாத நிலையில், உள்துறை அமைச்சரை சந்தித்துள்ளோம்.

28 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பிறகும், சிறையில் மகனது வாழ்க்கை கழிகிறது. விடுவிக்கலாம் என அறிவித்த பிறகும், சிறையில் இருக்கும் நிலை தொடர்கிறது. ஆளுநர் கையொப்பமிட்டால் விடுதலை என உச்சநீதிமன்றமே தெரிவித்துவிட்டது. வேறெங்கு செல்ல முடியும்?, அடுத்த வாரம் மீண்டும் தமிழக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுப்பேன்’ என தெரிவித்துள்ளார்.

அதேபோல் தொல்.திருமாவளவன் கூறுகையில், ‘பேரறிவாளனை பொறுத்தவரை குற்றமற்றவர் என விசாரணை அதிகாரியே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். வாக்குமூலம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தெரிவித்தோம். உரியவர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமித்ஷா தெரிவித்தார்.

இதனால் ஆளுநர் ஏன் முடிவெடுக்கவில்லை என மத்திய அரசு கேட்பதற்கு வாய்ப்பிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியின்போது இருந்த தயக்கம், தற்போதைய ஆட்சியின்போதும் இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers