அவரிடம் யாரும் ஏமாறாதீர்கள்! தமிழ்ப்பட நடிகரால் ஏற்பட்ட அவலம்... கண்ணீர் விட்ட இளைஞர்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் சினிமா ஆசைக்காட்டி லட்சக்கணக்கில் பண மோசடி செய்த நடிகரும் அவர் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் பகுதியில் அரசியல் கட்சி ஒன்றின் வட்ட செயலாளராக இருப்பவர் எஸ்.எஸ். கண்ணன்.

இவருக்கு கவித்ரன், நிகவித்ரன் என்று இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் கவித்ரனை கதா நாயகனாக வைத்து எஸ்.எஸ் கண்ணன், நம்ம கத என்ற பெயரில் படம் தயாரித்து வருவதாக விளம்பரம் வெளியிட்டுள்ளார்.

கண்ணன் , தனது இளைய மகனுடன் கல்லூரியில் பயிலும் நண்பர்களை அழைத்து பணம் கொடுத்தால் அந்த படத்தில் நடிக்கவைப்பதாக ஆசைவார்த்தை கூறி வந்துள்ளார்.

இதனை நம்பி சேலத்தை சேர்ந்த மூர்த்தி என்ற மாணவர், பகுதி நேரம் வேலை பார்த்து தான் சேர்த்து வைத்திருந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எஸ்.எஸ். கண்ணனிடம் கொடுத்துள்ளார்.

2 வது ஆண்டு கல்வி கட்டணத்தை அப்படியே கண்ணனிடம் கொடுத்து காத்திருந்த மூர்த்தி, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பணத்தை திருப்பி கேட்ட போது கண்ணன் மிரட்டியதாக கூறப்படுகின்றது.

நம்ம கத என்ற படமே வெளியாகாத நிலையில் கண்ணனின் மகன் கவித்ரன் ரூட்டு, பொருள் என அடுத்தடுத்து படங்களில் நடிப்பதாக கூறி பள்ளிக்கூடங்களில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட நகைச்சுவை எல்லாம் அரங்கேறியது.

மாணவர் மூர்த்தியை போல பலர் ஏமாற்றப்பட்டதாக தகவல் கிடைத்ததால், வேறு யாரும் இந்த சினிமா மோசடி கும்பலிடம் ஏமாந்துவிடாமல் இருக்க மூர்த்தி கண்ணீருடன் எச்சரிக்கை வீடியோ வெளியிட்டார்.

அதில், சினிமா ஆசையில் கண்ணனிடம் தனது படிப்புக்கு வைத்திருந்த பணத்தை பறிகொடுத்துவிட்டு படிப்பை பாதியிலேயே கைவிட்டு தவிப்பதாகவும், கண்ணன் மற்றும் அவரது மகன்கள் மிரட்டுவதாகவும் தெரிவித்ததோடு பொலிசிலும் புகாரளித்தார்.

இதையடுத்து பொலிசார் கண்ணனையும், கவித்ரனையும் கைது செய்தனர்.தலைமறைவான கல்லூரி மாணவர் நிகவித்ரனை தேடி வருகின்றனர்.

வெளியூர்களில் இருந்து சென்னைக்கு பல கனவுகளோடு வரும் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதை விட்டு இது போன்ற சினிமா மோகத்தில் சிக்கி ஏமாற வேண்டாம் என பொலிசார் எச்சரித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்