சினிமா பாணியில் நடந்த சேஸிங்.. கடலில் விழுந்த பொலிசாரைக் காப்பாற்றிய கடத்தல்காரர்கள்! பரபரப்பு வீடியோ

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ஸ்பெயனில் பொலிசாருக்கும், கடத்தல்காரர்களுக்கும் இடையே நடுக்கடலில் நடந்த சேஸிங் காட்சிகள் ஹெலிகாப்டரில் இருந்த கமெராவில் பதிவானது.

ஸ்பெயின் நாட்டில் மலகா கடற்பகுதியில், அதிவேக படகு ஒன்றில் அதிகளவில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இதனை உறுதி செய்ததைத் தொடர்ந்து, கடற்படை பொலிசார் அதிவேக படகில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

நடுக்கடலில் 4 பேர் கொண்ட கும்பல் போதைப்பொருளை கடத்தும் அதிவேக படகை, பொலிசாரின் படகு வேகமாக துரத்தியது. சினிமா பாணியில் இந்த துரத்தல் நடுக்கடலில் நடந்தது.

இந்த காட்சிகள் அனைத்தும் ஹெலிகாப்டரில் இருந்த கமெராவில் பதிவானது. துரத்தலின் போது பொலிசாரின் படகு, கடத்தல்காரர்களின் படகு மீது எதிர்பாராத விதமாக மோதியதில், நிலைகுலைந்த மூன்று பொலிசார் கடலில் விழுந்தனர்.

உடனே, ஹெலிகாப்டரில் பயணித்த அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம், கடத்தல்காரர்களிடம் படகை நிறுத்தும்படியும், கடலில் தத்தளிக்கும் பொலிசாருக்கு உதவும்படியும் கேட்டுக்கொண்டனர்.

அதனைக் கேட்ட கடத்தல்காரர்கள் திடீரென படகை திருப்பி, கடலில் தத்தளித்த பொலிசாரை காப்பாற்றினர். அதன் பின் உடனடியாக அவர்கள் அனைவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 80 பண்டல்களில், 3 டன் அளவுக்கு கஞ்சாவில் இருந்து எடுக்கப்படும் ஒருவகை போதைப்பொருளை அவர்கள் கைப்பற்றினர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்