பேஸ்புக் நேரலையில் சிக்கிய சில்லிட வைக்கும் காட்சி: ரத்த வெள்ளத்தில் சரிந்த இளைஞரால் மூண்ட கலவரம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவுக்கு எதிராக ஹாங்காங் பிராந்தியத்தில் நடந்தேறும் போராட்டங்களை ஒடுக்க பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தற்போது உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது பேஸ்புக் நேரலையில் வெளியாகி பார்ப்பவர்களை குலை நடுங்க வைத்துள்ளது.

ஹாங்காங் போராட்டமானது அங்குள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களால் தொடர்ந்து 24-வது வார இறுதியில் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டக்காரர்களை ஒடுக்க பொலிசார் கண்ணீர் புகை உள்ளிட்ட பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திங்களன்று பகல் போராட்டக்காரர்களில் முகமூடி அணிந்த ஒரு இளைஞரை கைது செய்யும் பொருட்டு பொலிசார் நெருங்கியுள்ளனர்.

ஆனால் அவர்களின் முயற்சி பலனளிக்காத நிலையில், திடீரென்று காவலர் ஒருவர் தமது துப்பாக்கியை எடுத்து, அந்த இளைஞரை மிக அருகாமையில் வைத்து சுட்டுள்ளார்.

காணொளியை காண

மிகவும் பரபரப்பான சாலையில், கூட்டத்தின் நடுவே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதனையடுத்து அங்கிருந்த போராட்டக்கரர்கள் துப்பாக்கிச் சூடு நடந்த பகுதிக்கு திரும்பியுள்ளனர். உடனே அந்த காவலர் மீண்டும் இருமுறை துப்பாக்கியால் அந்த இளைஞரை சுட்டுள்ளார்.

இதில் அந்த இளைஞரை காப்பாற்ற வந்த இன்னொரு இளைஞரும் காயமடைந்துள்ளார். ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்த இருவரையும் உடனடியாக பொலிசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவமானது அப்போது பேஸ்புக் நேரலையில் சிக்கியுள்ளது. தொடர்ந்து நகரின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் போராட்டம் வலுப்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறும் சில நிமிடங்கள் முன்னர், காவலர் ஒருவர் தமது இருச்சக்கர வாகனத்தில் போராட்டக்காரர்கள் மீது மோதும் வகையில் பாய்ந்து சென்றதும் நேரலையில் பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்தது தொடர்பில் பொலிசார் உறுதி செய்துள்ளது மட்டுமின்றி, விளக்கமளித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளனர்.

பொலிசாரின் எச்சரிக்கையை மீறி பொது சொத்துக்கு சேதம் விளைவிக்க முயன்றதாலையே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடில் படுகாயமடைந்துள்ள 21 வயது இளைஞர் தற்போது மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்