கப்பலில் வந்த சரக்கு பெட்டகத்தில் குவியலாக அழுகிய பிணங்கள்: பகீர் கிளப்பிய சம்பவத்தின் பின்னணி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
2758Shares

கப்பலின் சரக்கு பெட்டகத்தில் உணவுப் பொட்டலங்களுடன் திருட்டுத்தனமாக பயணம் செய்த 7 பேரின் அழுகிய சடலங்களை பராகுவே நாட்டில் துறைமுக அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

செர்பியாவில் இருந்து மூன்று மாதங்களுக்கு முன்னர் ரசாயன உரங்களுடன் சரக்கு கப்பல் ஒன்று புறப்பட்டுள்ளது.

குறித்த கப்பலானது அர்ஜென்டினா வழியாக சுமார் 7,000 மைல்கள் கடந்து இந்த வாரம் பராகுவே தலைநகரில் அமைந்துள்ள துறைமுகத்தில் கரைசேர்ந்துள்ளது.

இந்த நிலையில் செர்பியாவில் இருந்து ரசாயன உரங்களை இறக்குமதி செய்த நிறுவனமானது சரக்கு பெட்டகங்களை ஒவ்வொன்றாக பரிசோதித்தபோது இந்த பகீர் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

அதில் ஒரு பெட்டகத்தில் 7 பேர்களின் சடலம் இருந்துள்ளது. மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டதாகவும் நிறுவன அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

இவர்கள் 7 பேரும் திருட்டுத்தனமாக கப்பலின் சரக்கு பெட்டகத்தில் மறைந்திருந்து பயணம் செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

அதில் இருவரின் அடையாள அட்டையை பரிசோதித்ததில், அவர்கள் மொராக்கோ நாட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி செர்பியா நாட்டில் செயல்படும் வாடகை டாக்ஸி நிறுவனம் ஒன்றின் ரசீதும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இவர்கள் செர்பியாவில் இருந்து சரக்கு பெட்டகத்தில் நுழைந்திருக்கலாம் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

சடலங்களின் அருகாமையில் இருந்து மீட்கப்பட்ட உணவுப் பொட்டங்கள், மூன்று நாட்களுக்கு போதுமானதாக இருந்திருக்கும் எனவும்,

ஆனால் அவர்கள் தங்கள் பயணத்திற்கான உரிய திட்டமிடல் நடத்தவில்லை என்பதாலையே தற்போது சடலமாக மீட்கப்பட்டதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் தற்போது செர்பியா மற்றும் மொராக்கோ அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளதாகவும்,

கூடிய விரைவில் அவர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என பராகுவே அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்