ஜெயலலிதாவின் ஜிகினாக்கள் எல்லாமே பஞ்சர்தான்? கருணாநிதி விமர்சனம்

Report Print Basu in அரசியல்

தமிழகச் சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் ஜெயலலிதா படிக்கும் அறிக்கைகள் எல்லாமே பஞ்சர் தான் என திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து கருணாநிதி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை:

110வது விதியின் கீழ் அறிக்கையும், அதற்கு விளக்கமும்!

மதுரை, கோவை, திருச்சியிலும் மோனோ ரெயில் திட்டம் கொண்டுவரப்படும் என ஜிகினாக்களைத் தொங்க விட்டார் ஜெயலலிதா எல்லாமே பஞ்சர்தான்?

சொல்லுக்கும் செயலுக்கும் இவ்வளவு பெரிய இடைவெளியை வைத்துக் கொண்டு, சொல்வது எதற்கு? சொன்னதற்குப் பாராட்டு ஏன்? சொல்வதெல்லாம் வெற்று விளம்பரத்திற்குத்தான்; அனைவரையும் ஏமாற்றுவதற்குத்தான் என்றல்லவா பொதுமக்கள் நினைக்கிறார்கள்!

தமிழகச் சட்டப்பேரவையில் நம்முடைய முதல் அமைச்சர் ஜெயலலிதா, பேரவை நிகழ்ச்சிகளில் தனது பங்களிப்பாக எதையாவது பதிவு செய்ய வேண்டுமென்ற அவாவில், 110வது விதியின் கீழ் அறிக்கைகளைப் படிக்கத் தொடங்கி விட்டார்; அது பற்றி எதிர்க்கட்சித் தலைவர் தம்பி மு.க. ஸ்டாலினும், துணைத் தலைவர் தம்பி துரைமுருகனும் எழுப்பிய சில சந்தேகங்களுக்கும், முதலமைச்சர் அருமையான விளக்கங்களையெல்லாம் அவையிலே தந்திருக்கிறார்.

24 மணி நேரமும் மக்களைப் பற்றியே சிந்திப்பதால், புதிய புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்களாம்! அவர் கூறிய சில விளக்கங்கள் பற்றி கழக உறுப்பினர்கள் எழுப்ப முயன்ற சில சந்தேகங்களுக்கு பேரவைத் தலைவர் அனுமதி அளிக்கவில்லையாம்.

110வது விதியின் கீழ் ஓர் அறிக்கை பேரவையில் படிக்கப்பட்ட பின் அதைப் பற்றி எந்த விமர்சனமும் செய்யக் கூடாது. எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்று விதிகளிலேயே உள்ளது. செய்யப்பட்ட அறிவிப்புக்கு நன்றி கூறி, பாராட்டுத் தெரிவித்து மட்டும் பேசலாம் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

பாராட்டுத் தெரிவிப்பதேகூட ஒரு வகை விமர்சனம்தான் என்பதை ஜெயலலிதாவுக்கு யார் எடுத்தியம்பிடக் கூடும்? விதிகளிலே 110வது விதியின் கீழ் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்று நானும் எடுத்துப் பார்த்தேன்.

விதி 110 (1) பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி ஓர் அமைச்சர் பேரவைத் தலைவரின் இசைவுடன் அறிக்கை ஒன்றை அளிக்கலாம். (2) அவ்வறிக்கையின் மீது அப்போது எவ்வித விவாதமும் இருத்தல் கூடாது என்று தான் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள் புத்தகத் தில் உள்ளது.

இந்த விதியைப் படித்தவுடன், நமக்கு ஏற்பட்ட சந்தேகம், 110வது விதியின் கீழ் ஓர் அமைச்சர் அறிக்கை அளிக்கலாம் என்று பொதுவாகத்தான் இருக்கிறதே தவிர, முதல் அமைச்சர்தான் 110வது விதியின் கீழ் அனைத்து அறிக்கைகளையும் படிக்க வேண்டு மென்று குறிப்பாக அந்த விதியில் கூறப்பட வில்லையே?

அவை விதிகளில், ஓர் அமைச்சர் அறிக்கை ஒன்றைத் தரலாம் என்றிருக்கிறதே தவிர, முதலமைச்சர் என்று அதிலே கூறப்பட வில்லையே? அமைச்சர் என்ற வரையறைக்குள் முதல் அமைச்சரும் இடம் பெறுகிறார் என்று சொன்னாலும்கூட, அமைச்சர்களின் துறைகள் பற்றிய அறிக்கைகள் அனைத்தையும் முதலமைச்சரேதான் படிக்க வேண்டும்; மொத்தத்தில் விதி 110 என்பது அமைச்சர்கள் அனைவருக்கும் உள்ள பொது உரிமை அல்ல, முதலமைச்சருக்கு மட்டுமே உள்ள சிறப்புரிமை என்று அந்த விதியில் எந்த இடத்திலும் கூறப்படவில்லையே? என கூறியுள்ளார்.

மேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments