முற்றிலும் பழைய நிலைக்குத் திரும்புகிறது ஓசோன் படலம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஓசோன் படையில் பாதிப்பை ஏற்படுத்தும் பதார்த்தங்களின் அளவு தொடர்ச்சியாக குறைவடைந்து வருவதாக ஜ.நா தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இரசாயனங்களின் உற்பத்தியைத் தடைசெய்யும் போருட்டு கைச்சாத்திடப்பட்டிருந்த சர்வதேச ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இது சாத்தியமாகியுள்ளது.

இது ஓசோன் படையில் பாதிப்பை உண்டுபண்ணும் இரசாயனங்கள் மீதான 1989 ஆம் ஆண்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த மொன்றியல் ஒப்பந்தம்.

இதன் மூலமாக ஓசோனின் வளிமண்டலப் படையை சிதைவடையச் செய்யும் இரசாயனங்களின் உற்பத்தி நிறுத்திவைக்கபட்டிருந்தது.

ஓசோன் என்பது ஓட்சினை அடிப்படையாகக் கொண்ட ஒரு மூலக்கூறு.

இதன் இருக்கை தரைக்கு அண்மையில் அவ்வளவாக விரும்பப்படுவதில்லை.

ஆனாலும் இவ் ஓசோனானது புற ஊதாக்கதிர்களின் தீங்குவிளைவிக்கும் அலைநீளங்களை அகத்துறிஞ்சும் ஆற்றல் கொண்டது.

இதனால் இது போன்ற தீங்கு விளைவிக்கும் கதிர்கள் புவி மேற்பரப்பை அடைவது தடுக்கப்படுகிறது.

தலைக்கு மேலே 20 தொடக்கம் 30 கிலோமீட்டர் உயரத்தில் அதிகரிக்கும் ஓசோனின் செறிவு புற ஊதாக் கதிர்களால் நமக்கு ஏற்படும் கெடுதல்களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.

1980 களில் நிகழ்த்தப்பட்டிருந்த ஆய்வுகளில் தொழிற்சாலை மற்றும் வீட்டு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு இரசாயனங்கள் ஓசோன் படையை நலிதாக்குவது அறியப்பட்டிருந்தது.

இவ் ஓசோன் படல நலிதாதலானது ஒரு உலகளாவிய நிகழ்வாக கருதப்படினும், அந்தாட்டிக்கா பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த பருவகால அவதானிப்புக்கள் அக்காலத்தில் ஒசோன் படையில் ஏற்பட்டிருந்த துளை மீதான விளிப்புணர்வை ஏற்படுத்த காரணமாகியிருந்தன.

இதன் விளைவாக மொன்ரியல் உடன்படிக்கை அமுலுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

தற்போது கடந்த அறிக்கை வெளியாகி நான்கு வருடங்கள் கடந்து வெளியாகும் ஓசோன் மீதான 2018 ஆம் ஆண்டுக்குரிய மதிப்பீட்டு அறிக்கையானது அதன் போக்கு சரியான திசையில் பயணிப்பதையே வெளிக்காட்டியுள்ளன.

இறுதியாக 2014 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருந்த மதிப்பீடு தொடங்கி இன்றுவரை மொத்த ரோபோஸ்ஃபெரிக் குளோரின் (tropospheric chlorine) மற்றும் ரோபோஸ்ஃபெரிக் புரோமினின் (tropospheric bromine) செறிவுகள் குறைந்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நாம் இதுவரை குறைபட்டுக்கொண்டிருந்த பாரிய துளையும் படிப்படியாக தடிப்புறத் தொடங்கியுள்ளது.

மேலும் துருவப் பகுதிகளுக்கப்பால் ஓசோன் படலத்தின் அடர்த்தி 2000 ஆம் ஆண்டு தொடங்கி தசாப்பமொன்றிற்கு 1 தொடக்கம் 3 வீதத்தால் அதிகரித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

இதிலிருந்து வட அரைக்கோளத்தின் நடுத்தர அகலாங்கு பகுதியிலுள்ள ஒசோன் படலமானது 2030 ஆம் ஆண்டளவில் அது 1980 களில் எவ்வாறிருந்ததோ அதே நிலைக்குத் திரும்பும் எனவும், தென் துருவத்திலுள்ள துளையானது 2060 ஆம் ஆண்டளவில் முற்றாக மறையக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்