இந்தியாவில் கணவர் தன்னை சூதாட்டத்தில் வைத்து ஆடி தோற்றுவிட்டதாக கர்ப்பிணி மனைவி கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் விபின்குமார். இவருக்கும் லீலாவதி (25) என்ற பெண்ணுக்கும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
தற்போது கர்ப்பமாக இருக்கும் லீலாவதி நேற்று முன்தினம் பொலிசில் ஒரு புகாரை கொடுத்தார்.
அதில், இரண்டாண்டு முன்னர் விபினுடன் எனக்கு திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்களில் பைக்கை வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என கணவரும் அவர் குடும்பத்தாரும் என்னை கொடுமைப்படுத்த தொடங்கினர்.
சூதாட்டத்துக்கு அடிமையான விபின் என்னை வைத்து அவர் நண்பர் ராஜேஷ் என்பவரிடம் சூதாடி தோற்று போனார்.
இதையடுத்து நான் ராஜேஷுக்கு சொந்தமானவள் என கூறி அவருடன் என்னை போக சொன்னார்.
இதனால் பயந்து போன நான் என் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
பின்னர் இது தொடர்பாக இருவீட்டாரும் கலந்து பேசி விபினுக்கு வரதட்சணை கொடுக்க முடிவெடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து மீண்டும் கணவர் வீட்டில் சென்று வசித்தேன். ஆனால் மீண்டும் அதிக வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளனர், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பொலிசார் கூறுகையில், லீலாவதி கொடுத்த புகாரின் பேரில் விபினிடம் விசாரித்தோம், ஆனால் அவரோ லீலாவதி என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய், தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என அவள் என்னை தொடர்ந்து வற்புறுத்தி வந்தாள் என விபின் கூறியதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து இரு குடும்பத்தாரிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாகவும், வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரிக்கப்படும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்,