இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்து இன்றுடன் ஒருமாதம் நிறைவு... பல இடங்களில் நடக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு

Report Print Raju Raju in இலங்கை

இலங்கையில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்து இன்றுடன் ஒருமாதம் நிறைவு பெற்றுள்ள நிலையில் அங்கு தற்போதைய நிலவரம் குறித்து தெரியவந்துள்ளது.

இலங்கையில் கடந்த மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டதுடன், 500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

அன்றைய தினம் காலை 8.45 மணி முதல் 9.30 மணிவரை குறுகிய காலத்திற்குள்ளேயே இந்த அனைத்து தாக்குதல்களும் நடத்தப்பட்டன. தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்களில் பல வெளிநாட்டு பிரஜைகளும் அடங்குவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்தது.

இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்று கொண்டது.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 89 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலை அடுத்து நாட்டில் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் பல பதிவாகியிருந்த பின்னணியில், நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பல தடவை பொலிசார் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்தார்கள்.

இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பௌத்த விகாரைகள் மற்றும் இஸ்லாமிய பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்புக்கு மத்தியிலேயே பக்தர்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதை காண முடிகின்றது.

பாடசாலைகளுக்கும் பாதுகாப்பு பிரிவினர் தொடர்ந்தும் பாதுகாப்பை வழங்கி வருவதை காணமுடிகிறது.

இதோடு அரசாங்க நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்புக்காக முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையில் தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு மாதமாகின்ற நிலையில் இன்று அனைத்து இடங்களிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்