இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறன்று 270 பேரை பலிகொண்ட வெடிகுண்டு தாக்குதலானது உண்மையில் இந்தியர்களை குறிவைத்து முன்னெடுக்கப்பட்டதாக பகீர் தகவல் அம்பலமாகியுள்ளது.
முக்கியமாக இலங்கையில் செயல்பட்டுவரும் இந்திய துணை தூதரகம் மீது தாக்குதல் முன்னெடுப்பதே தீவிரவாதிகளின் முக்கிய இலக்கு எனவும் தெரியவந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறன்று பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 270 பேரை காவுகொண்ட இந்த கொடூர தாக்குதல் தொடர்பில் இலங்கை நாடாளுமன்ற சிறப்புக் குழு மேற்கொண்ட விசாரணையில் இது தொடர்பான பகீர் தகவல் அம்பலமாகியுள்ளது.
9 உறுப்பினர்கள் கொண்ட இந்த நாடாளுமன்ற சிறப்புக் குழு மொத்தம் 272 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை புதனன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கையிலேயே குறித்த பகீர் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் முக்கிய இலக்காக இந்திய துணை தூதரகம் இருப்பதாக தெரியவந்தும் அது தொடர்பில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாதது வியப்பளிப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் தாக்குதலுக்கு இரையான 3 ஹொட்டல்களிலும் இந்தியர்கள் பெருவாரியாக தங்கியிருந்ததும் இந்த விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
3 தேவாலயங்கள் மற்றும் 3 ஹொட்டல்களில் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை தாக்குதலில் சுமார் 400 பேர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
சுமார் 40 வெளிநாட்டவர்களும் இந்த வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற சிறப்புக் குழு அளித்துள்ள இந்த அறிக்கையில், இலங்கையை உலுக்கிய இந்த தாக்குதலுக்கு உளவுத்துறையின் பாரிய வீழ்ச்சியே காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.