தமிழகத்தில் தங்கியிருந்த இலங்கை தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா கோயமுத்தூரில், பிரதீப் சிங் என்ற பெயரில், கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் வசித்து வந்தார்.
கடந்த ஜுலை மாதம் 4-ஆம் திகதி இவர் உயிரிழந்த நிலையில், மதுரையில் உடல் தகனம் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் இலங்கையை சேர்ந்த அம்மானி தான்ஜி, மதுரையைச் சேர்ந்த பெண் வக்கீல் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. பொலிசார் மூன்று பேரையும் காவலில் எடுத்து, மூன்று நாட்களாக விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கடந்த, 2017-ஆம் ஆண்டு அங்கொட லொக்கா இலங்கையில் இருந்து படகு மூலம் தனது கூட்டாளி அதுருகிரியே லதியா உடன் இந்தியா வந்தது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி அங்கொட லொக்கா கோயமுத்தூர் சேரன் மாநகர் பகுதியில் தங்கியிருந்த போது கள்ளத்துப்பாக்கி பயன்படுத்தியுள்ளார்.
இதனால் அந்த துப்பாக்கியை கடந்த ஜுலை மாதம் 5-ஆம் திகதி அங்கொட லொக்காவின் சடலத்தை மதுரைக்கு எடுத்து செல்லும் போது அதுருகிரியேலடியாவிடம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.
மேலும், அதுருகிரியே லடியா கடந்த ஜூலை, 20-ஆம் திகதி வரை மதுரையில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், சி.பி.சி.ஐ.டி. பொலிசார் அதுருகிரியே லடியாவை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், அங்கொட லொக்கா, அவரது கூட்டாளி ஆகிய இருவரும் இந்தியா வந்ததும் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
அங்கொட லொக்கா போலி பாஸ்போர்ட் எடுத்த விவகாரத்தில் இரு முறை கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்த போது தான் தலைமறைவானார்.
இதற்கிடையில் அவர் இறந்த பின் அவரது கூட்டாளி மதுரை வந்து சென்றுள்ளதால், அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.