சுவிட்சர்லாந்தின் Solothurn நகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆறு பேரின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த தீவிபத்துக்கு ஒரு பெண்தான் காரணம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
நான்கு பெரியவர்களும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த அந்த வீட்டில் தங்கியிருந்தவர்கள், எத்தியோப்பியா மற்றும் எரித்ரியா நாட்டு அகதிகள் என்ற தகவலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த வீட்டில் தங்கியிருந்த ஒரு பெண், எரியும் சிகரெட்டை கையில் வைத்துக் கொண்டே உறங்கியதே தீப்பிடித்ததற்கு காரணமாக இருந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
அந்த பெண் சற்று மன நல பிரச்சினைகள் உடையவள் என்றும், ஒரு கையில் மதுபான பாட்டிலுடனும் இன்னொரு கையில் சிகரெட்டுடனும் ஜன்னல் வழியாக வெளியே வந்து அவள் அமர்ந்து கொள்வதுண்டு என்றும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது காவலிலிருக்கும் அந்த பெண்ணால், இரண்டு குடும்பங்கள் அழிந்துள்ளன.
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாய் தந்தையும், ஒரு குழந்தையும் உயிரிழந்த நிலையில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மகள் மட்டும் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள், பெற்றோரை இழந்தவளாக. இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோரும் ஒரு குழந்தையும் கூட உயிரிழந்துள்ள நிலையில், ஒரு சிறு பிள்ளையும், ஒரு கைக்குழந்தையும் பெற்றோரற்றவர்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த கட்டிடத்திற்கு வெளியே ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் கண்டுபிடிக்கப்பட்டனர், அந்த குழந்தை பிழைத்துக் கொண்டது, அந்த பெண்ணோ இறந்து விட்டார்.
அவர்கள் தீக்கு தப்ப ஜன்னல் வழியாக குதித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார், ஒன்பது பேர் மட்டுமே அந்த
வீட்டில் வசிப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எப்படி 20 பேர் வசித்தார்கள் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.