புகலிடக் கோரிக்கையாளருக்கு உதவிய பாதிரியார் மீது நடவடிக்கை: கைவிட கோரும் மனித உரிமைகள் அமைப்பு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட ஒருவருக்கு தங்குமிடமும் பணமும் கொடுத்து உதவிய ஒரு பாதிரியார் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிடுமாறு மனித உரிமைகள் அமைப்பு ஒன்று சுவிஸ் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆராதனை நடத்திக் கொண்டிருக்கும்போது பொலிசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட Norbert Valley என்ற அந்த பாதிரியார் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதா இல்லையா என்பது குறித்து நாளை அரசு வழக்கறிஞர் முடிவு எடுக்க உள்ள நிலையில், Amnesty International என்ற அந்த மனித உரிமைகள் அமைப்பு அவர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிடுமாறு சுவிஸ் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

பாதிரியார் Norbert Valley மீது, டோகோ (Togo) நாட்டைச் சேர்ந்த ஒருவரை சட்ட விரோதமாக தங்க வைப்பதற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்ட 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதத்தை செலுத்த அவர் மறுத்ததால், அவர் மீது குற்றச்சட்டு பதிவு செய்வதா இல்லையா என்பதை அரசு வழக்கறிஞர் முடிவு செய்ய இருக்கிறார்.

பாதிரியார் Norbert Valleyயைக் குறிவைப்பதின் மூலமும் அவரது இரக்கச் செயல்களை குற்றப்படுத்துவதன் மூலமும், அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவ விரும்புவோரின் மனிதாபிமான நடவடிக்கைகளை முடக்க அதிகாரிகள் எந்த அளவுக்கும் துணிவார்கள் என்பது தெளிவாக தெரிகிறது என்று Amnesty International கூறியுள்ளது.

Norbert Valley எந்த தவறும் செய்யவில்லை, கஷ்டத்திலிருந்த ஒரு மனிதருக்கு அவர் இரக்கம் காண்பித்திருக்கிறார், அவர் பாராட்டப்பட வேண்டுமேயன்றி அவருக்கு அபராதம் விதிக்கப்படக்கூடாது என்று கூறியுள்ள அந்த அமைப்பு, உடனடியாக அவர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers