எல்லை தாண்ட அந்தரங்க புகைப்படங்கள் கேட்ட அதிகாரிகள்: சுவிஸ் இளைஞர் வெளியிட்ட அதிரவைக்கும் சம்பவம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
602Shares

ஜேர்மனியின் Konstanz பகுதியில் உள்ள ஆண் நண்பரை சென்று சந்திக்க விரும்பிய சுவிஸ் இளைஞரிடம் எல்லையில் சுங்க அதிகாரிகள் அந்தரங்கப்புகைப்படம் கேட்டு கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த ஜேர்மன் அதிகாரிகளின் உண்மை முகத்தை அந்த இளைஞர் தற்போது அம்பலப்படுத்தியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் Kushtrim என்ற இளைஞர் கடந்த சனிக்கிழமை, ஜேர்மனியின் Konstanz பகுதியில் குடியிருக்கும் தமது ஆண் நண்பரை சென்று சந்திக்க விரும்பி அதிகாரிகளை நாடியுள்ளார்.

ஆனால் அங்கே நடந்த சம்பவம் தம்மால் இன்னும் நம்ப முடியவில்லை என்றே இளைஞர் Kushtrim அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தெரிவித்துள்ளார்.

பொதுவாக தற்போதைய கொரோனா கட்டுப்பாடுகளால் எல்லை தாண்டுவதற்கு, உறவுமுறை தொடர்பான ஆவணம் ஒன்றை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தால் மட்டுமே போதுமானது.

இதுவரை அவ்வாறே நடந்தும் வந்துள்ளதாக கூறும் Kushtrim, சம்பவத்தன்று Kreuzlingen - Konstanz எல்லையில் குறிப்பிட்ட ஆவணங்களை ஜேர்மன் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார்.

ஆனால் அவர்களுக்கு இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றை சமர்ப்பிக்க கேட்டுள்ளனர்.

இது அவசியமா முறையானதா என்று அவர் கேட்டபோது, சுங்க அதிகாரி சத்தமிட்டுள்ளார்.

மட்டுமின்றி, அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை ஒப்படைக்க முடியாது என்றால் சுவிட்சர்லாந்திலேயே திரும்பி செல்லுங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமது ஆண் நண்பருடன் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஏதும் இல்லை என்பதை பலமுறை எடுத்துக் கூறியும் அந்த ஜேர்மன் அதிகாரிகள் அனுமதிக்க மறுத்துள்ளனர்.

இறுதியில் பாரிஸ் நகருக்கு சுற்றுலா சென்றபோது இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை காட்டியுள்ளார்.

ஆனால், அதன் பின்னரே அவர்களின் உண்மை முகம் தமக்கு வெளிப்பட்டதாக கூறும் Kushtrim, சுற்றுலாவின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எதுவும் அவருக்கு போதுமானதாக இல்லை என்றும், தமது ஆண் நண்பர் உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படம் கூட அவர் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அதிர்ச்சி விலகாமல் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் மிகவும் ரகசியமாக பாதுகாத்து வந்த அந்தரங்க புகைப்படம் ஒன்றை அந்த ஜேர்மானிய சுங்க அதிகாரியின் பார்வைக்கு ஒப்படைத்த பின்னரே அவர் தம்மை அனுமதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தாம் ஒரு தன்பால் ஈர்ப்பாளர் என்பதால் தான் அந்த அதிகாரி இவ்வாறு நடந்து கொண்டாரா அல்லது,

ஆண்- பெண் காதலர்களுக்கும் அந்த அதிகாரி அந்தரங்கப்புகைப்படங்களை சமர்ப்பிக்க கோருவாரா என்பது தமக்கு விளங்கவில்லை என தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் உரிய பதில் கேட்டு, இளைஞர் Kushtrim பிரதான அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்