சுவிஸ் சட்டத்தரணி ஒருவருக்கு நள்ளிரவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. Enrico Monfrini என்னும் அந்த சட்டத்தரணிக்கு வந்த அந்த தொலைபேசி அழைப்பு, அவரது வாழ்க்கையையே 20 ஆண்டுகளுக்கு மாற்றிவிட்டது. அழைத்தது, நைஜீரிய அரசின் மூத்த அதிகாரி ஒருவர்.
அந்த அழைப்பின் பின்னணியிலிருந்த கதை இதுதான்... நைஜீரியாவில் இராணுவ தளபதியாக இருந்த Sani Abacha என்பவர் இராணுவ புரட்சி மூலம் அரசை கைப்பற்றியிருக்கிறார்.
பதவிக்கு வந்ததுமே, கடுமையான மனித உரிமை மீறல்கள், அரசு பணத்தை திருடுவது என அராஜக செயல்களில் ஈடுபட்டிருக்கிறார் Abacha.
அரசின் பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றிற்காக பணம் தேவை என்று கூறி, அரசு அதிகாரி ஒருவரை வங்கிக்கு அனுப்புவாராம் Abacha.

சில நேரங்களில் ட்ரக்குகளில் கூட கொண்டுவரப்படும் அளவுக்கு எக்கச்சக்கமான தொகையை வாங்கி தன் பெயரில் வங்கிகளில் சேர்ப்பது, காண்ட்ராக்டுகளை தனக்கு வேண்டியவர்களை வைத்து பெற்று, அதிலும் லாபம் பார்ப்பது, வெளிநாட்டு நிறுவனங்களை மிரட்டி பணம் பறிப்பது என ஐந்து ஆண்டுகளில் Abacha திருடிய பணம் 1.5 பில்லியன் டொலர்கள், அதாவது சுமார் 10650 கோடி ரூபாய்! அந்த பணத்தை சுவிஸ் முதலான பல நாடுகளின் வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளார் Abacha.
ஆனால், அவ்வளவு பணத்தையும் திருடிவிட்டு, அதை அனுபவிக்காமலே திடீரென 1998ஆம் ஆண்டு, ஒருநாள் தனது 54ஆவது வயதிலேயே மர்மமான முறையில் இறந்துபோனார் Abacha.
அவருக்கு பிரேத பரிசோதனை செய்யப்படாததால், அவர் மாரடைப்பினால் இறந்தாரா அல்லது அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கான விடைக்கு இன்றுவரை பதிலில்லை. அப்படி Abacha திருடியதாகக் கருதப்படும் அந்த 1.5 பில்லியன் டொலர்களை கண்டுபிடிக்கமுடியுமா என்பதுதான் சட்டத்தரணியான Monfrini முன் வைக்கப்பட்ட கேள்வி.

உடனே, முடியும் என்று பதிலளித்துவிட்டாராம் Monfrini. ஆனால், அவர் அதற்காக 20 ஆண்டுகள் உழைக்கவேண்டியிருந்தது.
சுவிஸ் அட்டர்னி ஜெனரலுக்கு இது குறித்து Monfrini தெரிவிக்க, அவர் சுவிஸ் வங்கிகளை எச்சரிக்க, 48 மணி நேரத்தில் Abachaவின் வங்கிக்கணக்கு விவரங்கள் வெளியிடப்பட்டன. அத்துடன் உலகம் முழுவதும் Abacha வைத்திருந்த வங்கிக்கணக்கு விவரங்கள் Monfriniயிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
ஆனால், அந்த பணத்தை பெறுவது Monfriniக்கு எளிதானதொன்றாக இல்லை. Abachaவின் குடும்பம் கடுமையாக எதிர்த்து போராடியிருக்கிறது.

என்றாலும், 20 ஆண்டுகள் முடிவில் நைஜீரிய அரசுக்கு சுமார் 2.4 பில்லியன் டொலர்களை பல்வேறு நாடுகளின் வங்கிகளிலிருந்து பெற்றுக் கொடுத்திருக்கிறார் Monfrini, ஆம், எதிர்பார்த்ததைவிட அதிகத்தொகை. வேலை முடிந்தது என்கிறார் Monfrini.
இப்போது Abachaவின் குடும்பம் பணக்காரக் குடும்பமாக இல்லை என ஒரு வதந்தி உலவுவதை தான் கேள்விப்பட்டதாக தெரிவிக்கிறார் Monfrini.
