உலகப்போர்களில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவுகூறும் நாளின் 100ஆவது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், பிரித்தானிய மகாராணியாரின் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடும் ஒரு நெகிழ்ச்சி புகைப்படம் வெளியாகியுள்ளது.
அந்த கண்ணீரின் பின்னால் இருக்கும் செய்திகள் அதிகம்!
இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற உலகத்தலைவர்களில் இன்றும் உயிருடன் இருக்கும் ஒரே தலைவர் பிரித்தானிய மகாராணியார்தான்.
அத்துடன் ராஜ குடும்ப பெண்களில் இராணுவத்தில் நுழைந்த ஒரே பெண்ணும் அவர்தான்.
இராணுவத்தில் சேருவதற்காக பல மாதங்களாக கெஞ்சிக் கூத்தாடி, 18 வயதாக இருக்கும்போது இரண்டாம் உலகப்போரின்போது பெண்களின் இராணுவப் பிரிவு ஒன்றில் இணைந்தார் அப்போது இளவரசியாக இருந்த எலிசபெத்.
ஒரு இராணுவ ட்ரக் சாரதியாகவும் மெக்கானிக்காகவும் பணியாற்றினார் அவர். நேற்று பிரித்தானியா உலகப்போர்களில் உயிரிழந்த வீரர்களை நினைவு கூறும் Remembrance Sundayயின் நூற்றாண்டு விழா அனுசரிக்கப்பட்ட நிலையில், அது மற்றொரு நிகழ்வையும் நினைவுகூர்ந்தது.
அதாவது 1918ஆம் ஆண்டு, முதல் உலகப்போர் நிறைவு பெற்ற நவம்பர் மாதம் 11 ஆம் திகதியை நினைவுகூறும் வகையில் ஒவ்வோராண்டும் 11ஆம் மாதம் 11ஆம் திகதி 11 மணிக்கு இரண்டு நிமிடங்கள் மவுனமாக நிற்பதை துவக்கி வைத்தார் மகாராணியாரின் தந்தை ஐந்தாம் ஜார்ஜ்.
அந்த நிகழ்வும் துவக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது அந்த நிகழ்வையும் நினைவுகூறும் நாளில்தான் மகாராணியாரின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன.
தந்தையையும் போர் நிகழ்வுகளையும் நினைவுகூர்ந்திருப்பார் போலும் மகாராணியார். குளிராக இருக்கிறது என்ற வார்த்தைகளைத் தவிர அவர் எதுவும் பேசவில்லை, மௌனமாகவே இருந்தார்.
அவரது சார்பில், அவரது கணவர் ஒரு மலர்க்கொத்தை நினைவிடத்தில் வைக்கும்போதுதான் தன்னையும் அறியாமல் அவரது கண்கள் கண்ணீரைச் சொரிந்தன.