பெருகும் மரண எண்ணிக்கை: நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரித்தானிய ராணியார்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் மரண எண்ணிக்கை பெருகி வரும் நிலையில், அரிதிலும் அரிதாக பிரித்தானிய ராணியார் நாட்டு மக்களுக்கு உரையாற்ற முடிவு செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வின்ட்சர் கோட்டையில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ள ராணியார் இந்த ஞாயிறு உள்ளூர் நேரப்படி 8 மணிக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றுகிறார்.

ராணியாராக பொறுப்பேற்றுள்ள இந்த 68 ஆண்டு காலத்தில் இதுவரை 3 முறை மட்டுமே அரிதான சந்தர்ப்பங்களில் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.

இக்கட்டான இச்சூழலில் இது நான்காவது முறை என கூறப்படுகிறது. முன்னரே பதிவு செய்யப்பட்ட அவரது உரையை குறிப்பிட்ட நேரத்தில் தொலைக்காட்சி மற்றும் அரச குடும்பத்திற்கான சமூக வலைதள பக்கங்களிலும் ஒளிபரப்பு செய்யப்படும்.

பொதுவாக ராணியார் எல்லா ஆண்டும் தமது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை நேரலை செய்வது உண்டு.

ஆனால் அரிதிலும் அரிதாக முதலாம் வளைகுடா போரின் போது, கடந்த 1991 ஆம் ஆண்டு அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு இளவரசி டயானாவின் மறைவுக்கு பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

தொடர்ந்து கடந்த 2002 ஆம் ஆண்டு தமது தாயாரின் மறைவை அடுத்து அவர் நாட்டுமக்களுக்கு உரையாற்றினார்.

தற்போது உலக நாடுகளை மொத்தமாக முடக்கிவரும் கொரோனாவால் பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 684 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து மொத்த மரண எண்ணிக்கை 3,605 என பதிவாகியுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38,168 என பதிவாகியுள்ள நிலையில்,

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 4,450 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்