தள்ளிப்போன முக்கிய சிகிச்சை... பிரித்தானிய இளம் பெண்கள் இருவரின் குடும்பத்தாருக்கு நேர்ந்த துயரம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares

பிரித்தானியாவில் கொரோனா பரவல் காரணமாக சரியான கவனிப்பைப் பெறாமல் இளம் பெண்கள் இருவர் புற்றுநோயால் இறந்துள்ள சம்பவம் அவர்களது குடும்பத்தாரை உலுக்கியுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டதால், 27 வயதான லதிபா கிங், மற்றும் 31 வயதான கெல்லி ஸ்மித் ஆகிய இருவரும் புற்றுநோயால் இறந்துள்ளனர்.

இளம் தாயாரான கெல்லி, குடல் புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சைக்கு தயாரான நிலையில், முதல் தேசிய ஊரடங்கால் அவருக்கு 3 மாத காலம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

இதேபோன்று, லதிபா கிங் என்பவருக்கு முதலில் இடுப்பு கீல் வாயுவால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

மட்டுமின்றி, அவரால் ஒரு மருத்துவரை நேரில் சந்திக்கவோ அல்லது உரிய பரிசோதனையும் செய்ய முடியவில்லை.

கடும் வலியால் அவதிப்பட்ட லதிபா, இறுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அவருக்கு மென்மையான திசு புற்றுநோய் உருவாகியிருப்பது கண்டறியப்பட்டது.

இதன் ஒருவாரத்திற்கு பின்னர் லதிபா கிங் மரணமடைந்துள்ளார். கொரோனா பரவல் இல்லாமல் இருந்திருந்தால் தமது சகோதரி இன்னும் உயிருடன் இருந்திருப்பார் என லதிபாவின் சகோதரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 75 பேர் ஒன்றிணைந்து, பிரதமர் ஜோன்சனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

பிரித்தானியாவில் மொத்தம் 100,000 மக்கள் கொரோனா காரணமாக புற்றுநோய்க்கான முக்கிய சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை தவற விடுகின்றனர்.

கொரோனா தடுப்பூசி வழங்க மேற்கொள்ளப்படும் அதே தீவிரத்தை, இனி புற்றுநோய் சிகிச்சை தேவைப்படுவோருக்கும் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த கடிதத்தில் முன்வைத்துள்ளனர்.

மேலும், கொரோனாவால் ஏற்படும் இடையூறு காரணமாக 50,000 நோயாளிகள் கண்டறியப்படாத புற்றுநோயுடன் வாழ்கிறார்கள் என்று எம்.பி.க்கள் கூறுகின்றனர்.

தொற்றுநோயிலிருந்து நாம் விடுபட்டு வெளியேறும் நேரத்தில் இந்த எண்ணிக்கை 100,000 வரை உயரக்கூடும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்