மோசமான சூழல் நிலவுகிறது.. புல்வாமா தாக்குதல் குறித்த டிரம்பின் பேச்சால் பதற்றம்!

Report Print Kabilan in அமெரிக்கா

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா முயல்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு 40க்கும் மேற்பட்ட இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக பேசி வருகின்றன.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் சீன துணை ஜனாதிபதி லீ ஹியுவுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் புல்வாமா தாக்குதல் குறித்து பேசினார்.

AP

அப்போது அவர் கூறுகையில், ‘இப்போது இந்தியாவில் காஷ்மீரில் நிலவும் சூழல் மிகுந்த ஆபத்தாக மாறி இருக்கிறது. புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா சார்பில் மிக கடுமையான பதிலடி தரப்படும் என்று நான் அறிகிறேன். ஏனென்றால் ஏறக்குறைய 50 வீரர்களை இந்திய அரசு இந்தத் தாக்குதலில் பறிகொடுத்துள்ளது.

இந்தியாவின் சூழலை, இந்தியர்களின் மனநிலையை நான் புரிந்துகொள்கிறேன். இந்தியா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முழு உரிமையும் இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றத்தைத் தணிக்க நாங்கள் முயற்சிகள் எடுத்து வருகிறோம். பல்வேறு தரப்பினரும் இது தொடர்பாக பேசி வருகிறார்கள்.

ஆனால், இரு தரப்பினரையும் இப்போதுள்ள சமநிலையில் வைப்பது மிக மிக அவசியமாகும். இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. பல விடயங்கள் நடந்துள்ளன. ஆனால், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இப்போதுள்ள சூழல் மிகவும் ஆபத்தாக மாறி இருக்கிறது. மிகவும் மோசமான சூழல் நிலவுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்.

ஏராளமான மக்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். இது இனிமேலும் தொடராமல் நிறுத்தப்பட வேண்டும். பாகிஸ்தானுடன் எங்களுடைய நிர்வாகம் நல்ல உறவைக் கொண்டுள்ளது. ஏறக்குறைய 130 கோடி டொலர் நிதியுதவியை நிறுத்திய நிலையிலும் உறவு தொடர்கிறது.

அமெரிக்காவின் மற்ற ஜனாதிபதிகள் காலத்தில் தங்களுக்கு ஆண்டுக்கு 130 கோடி டொலர் வழங்கப்பட்ட நிதியின் மூலம் அதிகமான முன்னுரிமையை பாகிஸ்தான் எடுத்துக் கொண்டுள்ளது. நான் வந்த பின் பாகிஸ்தானுக்கு நிதியுதவியை நிறுத்திவிட்டேன்.

நிதியுதவி வழங்கும் நிலையில் இல்லை. நேர்மையாகக் கூறினால், நிதியுதவியை நிறுத்திய போதிலும் கூட நாங்கள் பாகிஸ்தானுடன் நல்ல உறவை குறுகிய காலத்தில் ஏற்படுத்தியுள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்