விசாவுக்காக போலி திருமணங்கள்... 80 பேரை சட்டவிரோத குடிமகன்களாக்கிய இந்தியர்: வெளியாகும் பகீர் தகவல்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவுக்கு வேலை தேடிவருபவர்கள் அங்கேயே சட்டவிரோதமாக நிரந்தரமாக தங்குவதற்கேற்ப போலி திருமணங்கள் நடத்தியதாக கூறி இந்தியர் ஒருவர் கைதாகியுள்ளார்.

குறித்த நபருக்கு கடும் தண்டனை வழங்கப்பட உள்ளதாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு முதலில் படிக்கச் செல்வதுபோல சென்று பின்னர் அங்கேயே சட்டவிரோதமாக தங்கிவருவதாக நாளுக்குநாள் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இம்மோசடிகளில் அதிகம் இந்தியர்கள் ஈடுபடுவதாக பல ஆதாராங்கள் அம்பலமாகியுள்ளன.

அமெரிக்காவுக்கு சென்ற பிறகு அங்கேயே ஒரு அமெரிக்காவைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டால் அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்றுவிடலாம்,

இந்த விதிமுறையைப் பயன்படுத்திதான் பெரும்பாலான நூதன விசா மோசடிகள் நடந்துவருகின்றன.

புளோரிடாவின் பனாமா நகரில் வசிக்கும் 47 வயதான ரவி பாபு கொல்லா என்பவர் போலி திருமணங்களை நடத்தி விசா பெற்றுத்தரும் பணிகளில் கைதேர்ந்தவர்.

இவர் இதுவரை 80 பேரை இத்தகைய தவறான வழிகளில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற உதவியுள்ளார்.

அத்தகைய ஒரு வழக்கில் கையும்களவுமாக கைதுசெய்யப்பட்ட இந்தியர் ரவி மீதான குற்றச்சாட்டுக்கள் வரும் மே 22 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அன்றே அவருக்கு தண்டனை வழங்குவதற்கு அமெரிக்க நீதிமன்றம் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் வியாழக்கிழமை அன்று தெரிவித்துள்ளனர்.

இதற்கு உடந்தையாக செயல்பட்டதாக கிறிஸ்டல் கிளாட் (40), என்ற பெண் கடந்த டிசம்பர் 28 அன்று, விசா மோசடி சதியில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டதால் இரண்டு ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டார்.

ரவி பாபு கொல்லாவுக்கு உடந்தையாக செயல்பட்ட இப்பெண் அமெரிக்க குடிமகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள அலாபாமா மாகாணத்தில் மட்டுமே 80க்கும் மேற்பட்ட திருமணங்களை ரவி கொல்லா நடத்தியுள்ளதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு முதன்முதலாக ஒரு போலியான திருமணத்தை நடத்திவைத்தார். இவருக்கு உடந்தையாக இருந்த கிளாட் இந்திய குடிமக்களை மணந்துகொள்ள அமெரிக்க குடிமக்களை ஏற்பாடு செய்துதரும் பணிகளில் இவர் ரவி கொல்லாவால் பணியமர்த்தப்பட்டார்.

பனாமா நகரம், கால்ஹூன் ஊரகப் பகுதிகள் மற்றும் ஜாக்சன் மாவட்டப் பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற திருமணங்களில் இவரும் பங்கேற்றுள்ளதாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

விசா மோசடிகளுக்காக போலி திருணங்கள் நடத்தும் சதிவலைகள் பின்னியவகைகளில் இவருக்கு அதிகப்பட்சம் 5 ஆண்டுகளும் பண மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களில் அதிகப்பட்சம் இவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers