4 மாதங்களுக்கு பின்னர் சாதித்த அமெரிக்காவின் முக்கிய நகரம்: வெளிவரும் பின்னணி

Report Print Arbin Arbin in அமெரிக்கா
231Shares

அமெரிக்காவின் நியூயார்க்கில் கடந்த 4 மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக நேற்று கொரோனாவால் ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று உலகின் பெரும்பாலான நாடுகளுக்கும் பரவி தற்போது சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,42,559 ஆக உள்ளது.

சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,71,701 ஆகவும் குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 75,88,789 ஆகவும் அதிகரித்துள்ளது.

உலக நாடுகளில் அமெரிக்காவில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது.

இதில் நியூயார்க் நகரம் கொரோனா பரவலில் உச்சம் தொட்ட பகுதியாக மாறியிருந்தது.

மொத்த அமெரிக்காவிலும் இதுவரைக்கும் 34 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதில் நியூயார்க்கில் மட்டும் 4 லட்சம் பேர் உள்ளனர். மார்ச் 11 ஆம் திகதி முதன் முறையாக நியூயார்க்கில் கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டது.

மார்ச் மாத இறுதிக்குள் நோய்த் தொற்று பல மடங்கு அதிகரித்தது. ஏப்ரல் 9ம் திகதி எப்போதும் இல்லாத வகையில் ஒரேநாளில் சுமார் 799 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தனர்.

இது மொத்த அமெரிக்காவையும் அதிரவைத்தது. மொத்தமாக அங்கு 18,000-க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

நியூயார்க்கில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கடுமையான ஊரடங்கு, தொடர் பரிசோதனை, சிகிச்சை ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.

இதன் விளைவாக நேற்று அங்கு 341 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டன. அதேவேளை கடந்த 4 மாதத்தில் முதன்முறையாகக் கொரோனாவால் ஒரு மரணம் கூட பதிவாகவில்லை.

நியூயார்க் மக்கள்தான் இந்த சாதனைக்கு காரணமானவர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாகவும் அரசு ஆலோசனைகளைப் பின்பற்றியும் அனைவரின் நலனுக்காகவும் இணைந்து செயல்பட்டனர்.

இதன் விளைவுதான் உயிரிழப்புகள் இல்லாத நாள் வந்துள்ளது. அதேவேளை நாட்டின் பல பகுதிகளில் நோய் பரவல் அதிகரித்து வருவதால் நியூயார்க்கில் தற்போது இருக்கும் பாதுகாப்பை எங்களால் குறைக்க முடியாது.

வைரஸ் பரவலை எதிர்த்துப் போராட எங்களால் முடிந்த அனைத்தையும் தொடர்ந்து செய்வோம் என நியூயார்க் சிட்டி ஹாலின் செய்தித் தொடர்பாளர் Avery Cohen தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்