அமெரிக்காவின் Manhattan சுரங்க ரயில் பாதையில், நேற்று காலை ஒரு இளைஞர் திடீரென பெண் ஒருவரை வேகமாக ரயில் முன் தள்ளிவிடும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பெண்ணை தள்ளி விட்ட அந்த இளைஞரின் பெயர் Aditya Vemulapati (24) என தெரியவந்துள்ளது.
அவர் அந்த பெண்ணை தள்ளிவிட்டுவிட்டு தப்பியோடாமல் அங்கேயே நின்றுகொண்டிருந்திருக்கிறார்.
உடனடியாக அவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள். இதற்கிடையில், அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார்.
வெளியாகியுள்ள வீடியோவில், ரயிலுக்காக காத்திருந்த அந்த பெண்ணை, திடீரென ஓடிவந்து அந்த இளைஞர் தள்ளிவிடுவதையும், அதைக் கண்ட அதிர்ச்சியில் அங்கிருந்த ஒருவர் காதை மூடிக்கொண்டு முகத்தைத் திருப்பிக்கொள்வதையும் காணலாம்.
உடனடியாக ரயிலின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ரயில் நிறுத்தப்பட, ரயில் தண்டவாளத்துக்கும் சுவருக்கும் நடுவில் ஒடுங்கிக்கொண்டிருந்த அந்த பெண்ணை பொலிசார் மீட்டிருக்கிறார்கள்.
அவருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.