பல மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு பயனற்றுப்போன பொருளாதர மத்திய நிலையம்

Report Print Yathu in சமூகம்

கிளநொச்சியில் பல மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு நட்டமடைந்த வர்த்தகர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு கோரி ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்படவுள்ளது.

நாளை கிளிநொச்சிக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதியிடம் மேற்படி மகஜர் கையளிக்கவுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விசேட பொருளாதார மத்திய நிலையமானது கடந்த 2017ம்ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் திறந்து வைக்கப்பட்டது.

இப்பொருளாதார மத்திய நிலையத்தில் மொத்த விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு ஏற்றவகையில் நாற்பது கடைகள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டன.

தற்போது இரண்டு கடைகள் மாத்திரமே இயங்குகின்றது. ஏனைய கடைகள் மூடியநிலையில் காணப்படுவதுடன், பொருளாதார மத்திய நிலையம் பற்றைக்காடுகள் சூழும் நிலையிலும் காணப்படுகின்றன.

இந்த மத்திய நிலையத்தின் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு நட்டமடைந்த வர்த்தகர்கள் நாளை கிளிநொச்சி வரும் ஜனாதிபதிக்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை கையளிக்கவுள்ளனர்.

குறித்த மஜகரில் கடந்த காலங்களில் சரியான திட்டமிடல் இன்றி அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தினை சரியாகத் திட்டமிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளூர் உற்பத்தி பொருட்களை பொருளாதார மத்திய சந்தை ஊடாக சந்தைப்படுத்தவும், மொத்த வியாபார நடவடிக்கைகளையும் பொருளாதார மத்திய நிலையத்தில் முன்னெடுக்கவும் வழிவகை செய்ய வேண்டும்.

பொருளாதார மத்திய நிலையம் வினைத்திறனாகச் செயற்பட உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் பொருளாதார மத்திய நிலையத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு நட்டமடைந்த மொத்த வியாபாரிகளுக்கு நட்டஈடு அல்லது குறைந்த வட்டியில் கடன் அல்லது மானிய வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளை தாம் முன்வைக்கவிருப்பதாக பாதிக்கபபட்ட வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில்அபிவிருத்திகள் தொடர்பில் கடந்த காலங்களில் சரியான திட்டமிடல் இன்றி அப்போதைய ஒருங்கிணைப்புக் குழுவின் திட்டமிடப்படாத செயற்பாட்டினால் பல மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்பொருளாதார மத்திய நிலையம் பயனற்றுப்போயிருப்பதாகவும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கிளிநொச்சி புகையிரத நிலையம், ஏ-9 வீதி, ஆகியவற்றிலிருந்து மூன்று கிலோமீற்றர் தொலைவில் ஒதுக்குப்புறமான ஒரு பிரதேசத்தில் இதனை அமைத்திருப்பது பொருளாதார மத்திய நிலையத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்