இந்த வருடத்தில் மூன்றாவது முறையாக இலங்கை வொயிட் வாஷ்

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 5-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே 2 டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகின்றது.

2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி வென்று அசத்தியதைத் தொடர்ந்து, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வந்தது.

இதில் முதல் 4 போட்டிகளில் வென்று பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியிருந்த நிலையில், ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று ஷார்ஜாவில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன் படி களம் இறங்கிய இலங்கை அணியை பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் திணறிடித்தனர்.

துவக்க வீரர்கள் உபுல் தரங்கா(8), சமரவிக்ரமா(0) என வெளியேற, இவர்களைத் தொடர்ந்து வந்த தினேஷ் சண்டிமால்(0), திருமனே(19), டிக்வெல்லா(0) என வந்த வேகத்திலே பவுலியன் திரும்பினர்.

இதனால் இலங்கை அணி 26.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக திசார பெரேரா 25 ஓட்டங்களும், திருமனே 19 ஓட்டங்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் கான் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இலங்கை அணியை ஆட்டம் காண வைத்தார்.

இதையடுத்து 104 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்கள் இமாம் உல் ஹக் மற்றும் பாசர் ஜமான் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர்.

இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 84 ஓட்டங்கள் எடுத்த நிலையில், பாசர் ஜாமன் 48 ஓட்டங்களில் வெளியேற, பாகிஸ்தான் அணி இறுதியாக 20.2 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 105 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் வென்று, இலங்கை அணியை வொயிட்வாஷ் செய்து, டெஸ்ட் தொடர் தோல்விக்கு, இலங்கை அணியை பழி தீர்த்துள்ளது.

இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி இந்த வருடத்தில் ஒருநாள் தொடரில் மட்டும் மூன்றாவது முறையாக வொயிட் வாஷ் ஆகியுள்ளது. இதற்கு முன்னர் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுடன் வொயிட் வாஷ் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்