கடைசிவரை போராடிய உதானா.. இரண்டாவது டி20யிலும் தோல்வியுற்ற இலங்கை!

Report Print Kabilan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20யிலும் தோல்வியுற்றதால் இலங்கை அணி 0-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

இலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிக்ஸ் 65 ஓட்டங்களும், வான் டர் டூசன் 64 ஓட்டங்களும் விளாசினர். மேலும் ஜே.பி.டுமினி 17 பந்துகளில் 33 ஓட்டங்கள் குவிக்க தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 180 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக டிக்வெல்லா, பெர்னாண்டோ ஆகியோர் களமிறங்கினர். பெர்னாண்டோ ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும், டிக்வெல்லா 20 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். இதனால் இலங்கை அணி 62 ஓட்ட்டங்களுக்கு 6 விக்கெட் என தத்தளித்தது. இந்நிலையில் களமிறங்கிய உதானா அதிரடியில் மிரட்டினார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தபோதிலும் சிக்சர்களும், பவுண்டரியுமாக விளாசிய உதானா அரைசதம் கடந்தார். எனினும், இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்களே எடுத்து தோல்வியடைந்தது. இறுதிவரை போராடிய உதானா 48 பந்துகளில் 6 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் 84 ஓட்டங்கள் குவித்து களத்தில் இருந்தார்.

இந்த தோல்வியால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இலங்கை அணி 0-2 என்ற கணக்கில் இழந்தது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் 24ஆம் திகதி நடக்கிறது.

Getty

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்