பிரான்ஸ் நாட்டு இளம்பெண் கொலை வழக்கில் தீர்ப்பு: கதறியழுத தாயார்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

தயாரிப்பாளரான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் லண்டனிலுள்ள அவரது வீட்டில் அவரது முன்னாள் காதலரால் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண்ணான Laureline Garcia-Bertaux (34) ஒரு நாள் திடீரென பணிக்கு திரும்பாததையடுத்து, அவரது தோழிகள் பொலிசாருக்கு தகவலளித்தனர்.

அதற்கு முந்தைய தினம்தான் Laurelineஇன் மொபைலிலிருந்து அவரது தோழிகள் சிலருக்கு, தான் புது வீட்டில் குடியேறியுள்ளதாகவும், மார்பக அழகு சிகிச்சை செய்ய இருப்பதாகவும், ஷாப்பிங் செல்லப்போவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்துள்ளன.

ஆனால், Laureline ஷாப்பிங் செல்லும் பழக்கம் உடையவர் அல்ல, அவர் ஒன்லைனில்தான் பொருட்களை வாங்குவார் என்பதை நன்கு அறிந்திருந்த ஒரு தோழிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அந்த செய்திகளை யாரோ ஒருவர் Laurelineஇன் மொபிலிலிருந்து அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட, பொலிசாருக்கு தகவலளித்தார் அவர்.

அவரது புகாரின்பேரில் Laurelineஐ தேடிய பொலிசார், அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் அவரது வீட்டை சோதனையிட்டுள்ளனர்.

அப்போது அவரது வீட்டின் பின்புறம் சமீபத்தில் குழி தோண்டப்பட்டுள்ளதைக் கண்டு, அந்த இடத்தில் தோண்டும்போது, அங்கு Laurelineஇன் உடல் நிர்வாண கோலத்தில், பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடைசியாக அவருடன் அவரது முன்னாள் காதலரான Kirill Belorusov (32) இருக்கும் CCTV கமெரா காட்சிகள் கிடைத்ததையடுத்து, பொலிசார் அவரை தேடினர். ஆனால் அதற்குள் எஸ்தோனியரான Belorusov சொந்த நாட்டுக்கு தப்பியோடிவிட்டார். பொலிசார் அவரை எஸ்தோனியாவிலிருந்து லண்டன் அழைத்து வந்தனர்.

லண்டனிலுள்ள மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில், Belorusovம் Laurelineம் 2009 முதல் காதலித்து வந்ததாகவும், சோம்பேறியாகவும் சுத்தமில்லாதவராகவும் இருந்த Belorusov, எப்போதும் Laureline குண்டாக இருப்பதாகக் கூறி அவரை சித்திரவதை செய்துவந்ததையடுத்து இருவரும் 2017ஆம் ஆண்டுபிரிந்ததாகவும் தெரியவந்தது.

இதற்கிடையில் தன்னை ஒரு ஸ்டண்ட்மேன் என்றும் கேஸினோ ஒன்றில் பாதுகாவலர் என்றும் கூறிவந்த Belorusov, உண்மையில் பார்களிலும் இரவு விடுதிகளிலும் வேலை செய்வதும் தெரியவந்துள்ளது.

அத்துடன் பல ஆயிரம் பவுண்டுகள் Laurelineஇடம் கடன்வாங்கிய Belorusov, அதை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றுவதற்காக, மொட்டையடித்துக் கொண்டு தனக்கு புற்றுநோய் என்று கூறி Laurelineஐ ஏமாற்றியிருப்பதும் தெரியவந்துள்ளது.

Belorusov முழுமையான ஒரு மோசடியாளர் என்பது Laurelineக்கு தெரியவரவே, விடயம் வெளியில் வந்துவிட்டால் சிக்கிக்கொள்வோம் என்று அஞ்சிய Belorusov, Laurelineஐ கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

வீடு தேடிக்கொண்டிருந்த Laurelineக்கு வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்துக் கொடுக்க உதவுவதுபோல அவரை சந்தித்த Belorusov, அவரை கழுத்தை நெறித்து கொலை செய்து, அவரது வீட்டின் பின்புறமே புதைத்துள்ளார்.

Belorusovக்கு குறைந்த பட்சம் 24 ஆண்டுகள் சிறையில் இருக்கும் வண்ணம் ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, நீ ஒரு மோசடியாளன், தொடர்ந்து பொய் மேல் பொய் சொல்லி, உன் பொய்களை மற்றவர்கள் நம்புவார்கள் என்றும் எண்ணியிருக்கிறாய் என கடுமையாக கடிந்துகொண்டார்.

தீர்ப்பைக் கேட்டு கதறியழுத Laurelineஇன் தாயார் Federique Bertaux, ஒருவரால் அவரது குழந்தை இறந்துபோனது என்ற செய்தியை மட்டும் கேட்கவே முடியாது,

Laurelineஐ எண்ணாத கணமே இல்லை, அவளை இனி நான் எப்படி முத்தமிடுவேன், அம்மா, உங்களை நேசிக்கிறேன் என்று அவள் கூறுவதை கேட்க நான் என்ன வேண்டுமானாலும் தரத் தயார் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்