மரண தண்டனை.. நாடு கடத்தல் என பல இன்னல்களுக்கு ஆளான பெண்ணின் பெரிய ஆசையை நிறைவேற்றுமா பிரான்ஸ்

Report Print Basu in பிரான்ஸ்

பாகிஸ்தானில் 2010ம் ஆண்டு அவதூறு குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பல ஆண்டுகள் சிறையில் கழித்த பாகிஸ்தான் கிறிஸ்தவ பெண் ஆசியா பீபி, பிரான்ஸ் அரசாங்கத்திடம் அரசியல் தஞ்சம் கோருவதாக வெளிப்படையாக தெரிவித்தார்.

பாகிஸ்தானில் 2009ம் ஆண்டு பீபி உடன் பணிபுரிந்த முஸ்லிம் தொழிலாளர்கள் அவர் கிறிஸ்தவர் என்பதால் அவருடன் தண்ணீரைப் பகிர்ந்து கொள்ள மறுத்தனர்.

இது தொடர்பில் வாக்குவாதம் ஏற்பட, பின்னர் முஸ்லீம் பெண் ஒருவர் உள்ளுர் மதகுருவிடம் சென்று, நபிகள் நாயகத்திற்கு எதிராக பீபி அவதூறு செய்ததாக குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டில் 2010ம் ஆண்டு பீபிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பல ஆண்டுகள் சிறையில் கழித்த நிலையில், 2018ம் ஆண்டு பாகிஸ்தானின் தலைமை நீதிபதியால் பீபி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

பீபி விடுவிக்கப்பட்ட போதிலும், அவரது மரணத்திற்காக இத்தனை ஆண்டுகள் போராடிய நபர்களால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என ஆர்வலர்கள் எச்சரித்தனர்.

பீபி விடுவிக்கப்பட்டதை அடுத்து முஸ்லிம் பெரும்பான்மை உடைய பாகிஸ்தானில் கடுமையான கலவரம் ஏற்பட்டது, கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் துன்புறுத்தலுக்கு இலக்கானார்கள்.

இந்நிலையில் 2018 மே மாதம் பீபி கனடாவுக்கு நாடு கடத்தப்பட்டார், அங்கு பீபியை சந்தித்த ஒரே நிருபர் பிரான்ஸ் பத்திரிகையாளர் அன்னே-இசபெல் டோலெட் ஆவார்.

கனடாவில் அவர் தனது குடும்பத்தினருடன் பொலிஸ் பாதுகாப்பில் வெளியிடப்படாத இடத்தில் வசித்து வருகிறார்.

பாகிஸ்தான் சிறைச்சாலையில் உள்ள அவமானகரமான மற்றும் கொடூரமான நிலைமைகள் மற்றும் நாட்டின் கிறிஸ்தவ சிறுபான்மையினர் அனுபவிக்கும் அன்றாட வேதனைகளைப் பற்றி பிபி புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார்.

அவர் எழுதிய "Enfin Libre!" (இறுதியாக சுதந்திரம்) புத்தகம் கடந்த மாதம் பிரெஞ்சி மொழியில் வெளியிடப்பட்டது. குறித்த புத்தகத்தின் ஆங்கில பதிப்பு செப்டம்பர் மாதம் வெளியானது.

பீபியின் விடுதலைக்காக ஒரு நீண்ட பிரசாரத்தை மேற்கொண்டா பிரான்ஸ் பத்திரிகையாளர் அன்னே-இசபெல் டோலெட், அவருடன் இணைந்து புத்தகம் எழுதியுள்ளார்.

பாகிஸ்தான் எனது நாடு. நான் என் நாட்டை நேசிக்கிறேன், ஆனால் நான் என்றென்றும் நாடு கடத்தப்படுகிறேன் என்று பீபி புத்தகத்தில் எழுதியுள்ளார்.

புத்தகம் வெளியிடப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, பீபி முதன் முறையாக பிரான்ஸிற்கு வருகை தந்துள்ளார். 2018ல் கனடாவிற்கு நாடு கடத்தப்பட்ட பிறகு பீபி மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

செவ்வாயன்று, பாரிஸ் மேயர் அன்னே ஹிடால்கோ, 2014 ஆம் ஆண்டில் பீபிக்கு வழங்கப்பட்ட கெளரவ குடியுரிமை சான்றிதழை வழங்குவார். 2014 ஆம் ஆண்டு பீபி சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் வானொலிக்கு பீபி அளித்த பேட்டியில், பிரான்சில் வாழ வேண்டும் என்பதே எனது பெரிய ஆசை நான் எனது புதிய வாழ்க்கையை பெற காரணமான நாடு பிரான்ஸ், பத்திரிகையாளர் அன்னே-இசபெல் எனக்கு ஒரு தேவதை என்று கூறினார்,

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை சந்திக்க எந்தவொரு திட்டமும் இல்லை, ஆனால் அரசியல் தஞ்சம் கோரும் எனது கோரிக்கையை ஜனாதிபதி கருத்தில் கொள்ள விரும்புகிறேன் என்று வெளிப்படையாக கூறினார்.

நான் கனடாவுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவதூறு எதிர்ப்புச் சட்டங்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்றவர்களை விடுவிக்குமாறு பாகிஸ்தான் அதிகாரிகளை வலியுறுத்துவதற்காக டோலெட்டுன் கைகோர்த்து பணியாற்ற விரும்புவதாக கூறினார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்