உடல் தோலை மெதுவாக தொட்டாலே கிழிந்து விடுவது மற்றும் கொப்பளங்கள் ஏற்படுவது என்ற விசித்திர வியாதியால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மரபணுவால் மாற்றப்பட்ட புதிய தோல்கள் பொருத்தப்பட்டுள்ளது.
சிரியாவை சேர்ந்த சிறுவன் ஹாசன் (7) சிறுவயதிலிருந்தே Junctional Epidermolysis Bullosa என்ற விசித்திர தோல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தான்.
அதாவது அவன் உடல் தோல்களை மெதுவாக தொட்டாலே அது கிழிந்து விடுவதோடு, கொப்பளங்களும் ஏற்படும்.
இப்படியே சென்றால் விரைவில் ஹாசன் உயிரிழந்து விடுவான் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து கடந்த 2015-ல் ஜேர்மனியில் உள்ள போச்சும் குழந்தைகள் மருத்துவமனையில் ஹாசனை அவன் பெற்றோர் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
உலக புகழ்பெற்ற பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சையை மேற்கொள்ளும் மருத்துவ குழு அவனுக்கு மூன்று ஆப்ரேஷன்களை செய்தது.
அதாவது, பரிசோதனை கூடத்தில் செயற்கையாக மரபணுவால் மாற்றப்பட்ட உடல் தோல்கள் தயார் செய்யப்பட்டு ஹாசனின் 80 சதவீத உடல் பகுதிகளில் பொருத்தப்பட்டது.
தற்போது ஹாசன் எல்லா சிறுவர்களை போல மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் விளையாடுவதாக அவன் தந்தை கூறியுள்ளார்.
வீட்டிலேயே பயிற்சியாளரை வைத்து ஹாசன் கால்பந்து விளையாட கற்றுவருகிறான்.
இதுகுறித்து மருத்துவர் மிச்செல் டி லூகா கூறுகையில், சிறுவன் கவலைக்கிடமான நிலையில் தான் இருந்தான், ஆனாலும் சிகிச்சையின் மூலம் பிழைத்துவிட்டதாக கூறியுள்ளார்.