விபத்தை புகைப்படம் எடுக்க முயன்ற வாகன ஓட்டிகள்: காவலரின் வித்தியாசமான நடவடிக்கைக்கு குவியும் பாராட்டுகள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பவேரியாவில் வாகன ஓட்டிகள் சாலை விபத்தொன்றை புகைப்படம் எடுப்பதற்காக வாகனத்தின் வேகத்தை குறைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், போக்குவரத்து காவலர் ஒருவர் எடுத்த அதிரடி நடவடிக்கைக்கு பாராட்டுகள் குவிகின்றன.

ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், வாகன ஓட்டிகள் சாலை விபத்தை பார்ப்பதற்காகவும் புகைப்படம் எடுப்பதற்காகவும் வாகனங்களை வேகம் குறைத்து எட்டிப்பார்ப்பதை கவனிக்கிறார் ஒரு போக்குவரத்துக் காவலர்.

Nuremberg பகுதியில் நெடுஞ்சாலை ஒன்றில் போக்குவரத்தை கண்காணித்து வந்த Stefan Pfeiffer என்னும் அந்த பொலிசார், வாகனத்திலிருந்து எட்டிப்பார்க்கும் வாகன ஓட்டியை வாகனத்திருந்து இறங்கச் சொல்கிறார்.

விபத்தை இன்னும் பக்கத்தில் பார்க்கவும் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் ஆசையா என்று கேட்டு அந்த வாகன ஓட்டியை விபத்தில் சிக்கி இறந்து கிடப்பவர்களின் அருகே அழைத்துச் செல்கிறார் Stefan.

இறந்து கிடப்பவர்களின் கோர காட்சியைக் காண சகியாமல் முகத்தை திருப்பிக் கொள்ளும் வாகன ஓட்டியிடம், இதை புகைப்படம் எடுக்கத்தானே வாகனத்திலிருந்து எட்டிப்பார்க்கிறீர்கள், உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று கேட்டு 128.50 யூரோக்கள் அபராதமும் விதிக்கிறார் Stefan.

ட்விட்டரில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட, அது உடனடியாக வைரலானது. 65,000 பேர் அதை பார்த்துள்ளதோடு, 2000 முறை அந்த வீடியோ ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது.

வீடியோவைப் பார்த்த பலரும் பிரச்சினையை தீர்க்க Stefan எடுத்த வித்தியாசமான முறையை பாராட்டியுள்ளனர்.

வெறுமனே அபராதம் விதித்தால் மீண்டும் மீண்டும் இதே தவறைதான் வாகன ஓட்டிகள் செய்வார்கள் என்று கூறும் Stefan, விபத்தின் கோரத்தை பார்த்தாலாவது இறந்து அல்லது காயம்பட்டு கிடப்பவர்களை புகைப்படம் எடுக்கும் இதே தவறை மீண்டும் செய்ய மாட்டார்கள் என்கிறார்.

ஜேர்மனியில் விபத்து ஒன்றை அதிகாரப்பூர்வமின்றி புகைப்படம் எடுப்பதற்கு விதிக்கப்படும் தண்டனை, 128.50 யூரோக்கள் அபராதம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்