இந்தியர் மீதான மரணத் தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தடை

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய உளவாளி என கைது செய்யப்பட்ட குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனைக்கு தற்காலிக தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச நீதிமன்றத்தின் ரத்து உத்தரவாணை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சர்வதேச நீதிமன்ற தரப்பில், பாகிஸ்தானில் குல்பூஷண் ஜாதவுக்கு வழங்கப்பட்ட மரணத்தண்டனைக்கு தடை விதிக்க கோரிய இந்தியாவின் வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.

ஜாதவின் மரண தண்டனை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது குறித்து அவரது தாயாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருக்கிறார்.

இந்திய கடற்படையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ். கடந்த 2016 மார்ச் 3-ஆம் திகதி அவர் ஈரானில் இருந்து பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், மாஸ்கெல் பகுதிக்குச் சென்றுள்ளார்.

அங்கு அவரை அந்த நாட்டு உளவுத் துறையினர் கைது செய்தனர். அவர் பாகிஸ்தானுக்கு எதிராக சதி செய்ததாகவும் கராச்சி குண்டுவெடிப்பில் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த ராணுவ நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா நாடாளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவித்தது. வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் ஏற்கெனவே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட கொலையாகி விடும் என்றும், இரு தரப்பு உறவுகளில் கடும் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஜாதவ் மீதான குற்றப்பத்திரிகை மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பின் நகல் இந்தியா தரப்பில் கோரப்பட்டது. இதற்கான பதிலை பாகிஸ்தான் அளிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா தரப்பில் முறையிடப்பட்டது.

இந்த நிலையில் குல்பூஷண் மரணத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு தற்காலிக தடையை சர்வதேச நீதிமன்றம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments