பெண்ணாக பிறந்ததால் ஆத்திரம்.. துடிதுடிக்க பிஞ்சுக்குழந்தையை கொன்ற தந்தை

Report Print Vijay Amburore in இந்தியா

கர்நாடக மாநிலத்தில் ஒன்றரை மாத பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மஞ்சுநாத் (24) - சுப்ரீதா தம்பதியினருக்கு கடந்த மே மாதம் நிகாரிகா என்கிற பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஏற்கனவே வீட்டில் தன்னுடைய உடன்பிறப்புகளுக்கும் பெண் குழந்தை பிறந்ததிருந்ததால், கோபத்தில் இருந்த மஞ்சுநாத், நிகாரிகாவை வெறுக்க ஆரம்பித்துள்ளார்.

ஜூன் மாதம் 18ம் திகதியன்று வீட்டில் இருந்த அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். அவருடைய மனைவி சுப்ரீதா, வெளியில் துணி துவைத்துக்கொண்டிருந்துள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மஞ்சுநாத், தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதற்கிடையில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குள் வந்த சுப்ரீதா, குழந்தையின் மூக்கு மற்றும் வாய்ப்பகுதியில் ரத்தம் வழிந்தபடி, சுயநினைவில்லாமல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த நிலைமை குறித்து கணவரின் கேட்டபோது, எனக்கு உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தேன். எனக்கு எதுவும் தெரியாது என மஞ்சுநாத் கூறியுள்ளார்.

உடனே மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று பரிசோதித்தபோது, குழந்தை இறந்துவிட்டதாகவும், எதற்கும் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுங்கள் என மருத்துவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் அறிந்த ஊர்மக்கள் அனைவரும் சுப்ரீதா வீட்டின் முன் குவிந்தனர். அங்கிருந்த யாரும் பொலிஸிற்கு தகவல் கொடுக்க கூடாது என மிரட்டும் தொனியில் மஞ்சுநாத் கூறியுள்ளார்.

மேலும் அன்றைய தினமே மஞ்சுநாத் தனது குற்றத்தை மறைக்க, நிகரிகாவின் உடலை புச்செனஹள்ளியில் உள்ள தனது உறவினர் முனிசாமியின் நிலத்தில் அடக்கம் செய்தார்.

இதனால் சந்தேகமடைந்த அவருடைய மனைவி பொலிஸிற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் வந்த பொலிஸார் மஞ்சுநாத்திடம் விசாரணை மேற்கொண்ட போது, பெண் குழந்தையால் வீட்டிற்கு கெடுதல் நடக்க போகிறது என்று ஜோதிடர் கூறியதால் தான் கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார்.

ஜோதிடரின் பேச்சை கேட்டு பிஞ்சுக்குழந்தையை தந்தையே கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்