மனைவியை கொலை செய்த செய்தி வாசிப்பாளர்: 4 நாட்களுக்கு பின் அம்பலமான உண்மை!

Report Print Vijay Amburore in இந்தியா

உத்திரபிரதேச மாநிலத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அஜிதேஷ் மிஸ்ரா என்பவரின் மனைவி திவ்யா (27). அஜிதேஷ் மிஸ்ரா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 14ம் திகதியன்று வீட்டில் தனியாக இருந்த திவ்யா தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் அஜிதேஷ், மனைவியை கொலை செய்ததை பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நானும், என்னுடன் பணிபுரியும் பாவ்னா ஆர்யா என்கிற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறோம். சமீபத்தில் இதனை தெரிந்துகொண்ட திவ்யா அடிக்கடி என்னிடம் சண்டையிட்டு வந்தார்.

இதனால் அவரை கொலை செய்துவிடலாம் என முடிவெடுத்து, என்னுடைய நண்பன் அகில் குமார் உதவியை நாடினேன். திவ்யாவிற்கு, அகில் குமாரை நன்றாக தெரியும். 14ம் திகதியன்று அகில் குமார் என்னை பார்க்க வருவது போல வீட்டிற்கு வந்திருந்தான்.

அவனிடம் எங்களுடைய திருமண புகைப்படங்களை திவ்யா காட்டிக்கொண்டிருந்த சமயத்தில், அங்கிருந்த பூச்சட்டியை எடுத்து தலையில் அடித்து கொன்றுவிட்டு அகில் வெளியேறிவிட்டான் எனக்கூறியுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக அஜிதேஷ், அவருடைய காதலி பாவ்னா ஆர்யா மற்றும் நண்பன் அகில் குமார் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்