காதலிக்கு காட்டுக்குள் பிரசவம் பார்த்த காதலன்: கை துண்டாகி உயிரிழந்த குழந்தை... உயிருக்கு போராடும் மாணவி!

Report Print Vijay Amburore in இந்தியா

வெளியில் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக காட்டுக்குள் வைத்து காதலிக்கு பிரசவம் பார்த்த காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கும் வேலை செய்து வரும் சௌந்தர் என்கிற இளைஞர், அதேபகுதியில் உள்ள அரசுக்கல்லூரியில் பயின்று வரும் 19 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் நெருங்கி பழகியதில் மாணவி கர்ப்பமடைந்துள்ளார். இதற்கிடையில் இருவரின் காதலுக்கு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கர்ப்பதுடனே மாணவி கல்லூரி சென்றுவந்துள்ளார்.

இந்த நிலையில் 8 மாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே சௌந்தருக்கு போன் செய்த மாணவி, திருமணம் செய்துகொள்ளாமலே குழந்தை பெற்றெடுக்க போவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மாணவியை வெளியே வருமாறு கூறிய சௌந்தர், ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு மாணவிக்கு பிரசவ வலி அதிகரித்ததை அடுத்து, யூடியூபில் வீடியோ பார்த்து தனி ஒரு ஆளாக சௌந்தர் பிரசவம் பார்க்க ஆரம்பித்துள்ளார்.

அப்போது குழந்தையின் கை மட்டும் முதலில் வெளியில் வந்துள்ளது. அதனை பிடித்து சௌந்தர் வெளியில் இழுத்ததில் கை துண்டாகியதாக கூறப்படுகிறது.

குழந்தையின் மற்ற உடல் முழுவதும் உள்ளே சிக்கிக்கொண்ட நிலையில், மாணவிக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமாகுவதை உணர்ந்த சௌந்தர், உடனடியாக மாணவியின் தாய்க்கும், ஆம்புலன்ஸிற்கும் தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், வேகமாக மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளனர். பின்னர் மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்து, இறந்த நிலையில் ஆண் குழந்தையை வெளியில் எடுத்தனர்.

தற்போது மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ள பொலிஸார், சௌந்தரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்