இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்! இளைஞன் குறித்து தவறாக பரப்பப்பட்ட வீடியோ... அவமானத்தில் தற்கொலை

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என ஒரு இளைஞர் குறித்து வீடியோ பரவிய நிலையில் அவமானத்தில் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் முஸ்தபா. கேரளாவில் வேலை செய்து வந்த இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் மதுரைக்கு வந்து தன்னுடைய அம்மாவுடன் தங்கியிருந்தார்.

ஊரில் இருந்து வந்ததில் இருந்தே முஸ்தபாவுக்கு சளி, இருமல், காய்ச்சல் இருந்துள்ளது.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று கருதி சுகாதாரத்துறை மற்றும் பொலிசாருக்கு உடனடியாக தகவல் தந்தனர்.

இதையடுத்து சுகாதாரத்துறையினரும் விரைந்து வந்து இவரிடம் விசாரணை நடத்தினர்.

எனினும் சந்தேகத்தின்பேரில், முஸ்தபாவையும், அவரது அம்மாவையும் 108 ஆம்புலன்சில் ஏற்றி, மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவெடுத்தனர்.

ஆனால் தகவல் சொல்லி 2 மணி நேரம் ஆகியும், 108 ஆம்புலன்ஸ் வரவில்லை. அதனால் அந்த பகுதி மக்களே ஒரு சரக்கு வாகனம் தயார் செய்து இவர்களை அனுப்பி வைத்தனர்.

அப்படி வண்டியில் ஏறும்போது, முஸ்தாபாவையும் அக்கம்பக்கத்தினர் சிலர் தங்களது வீடுகளில் இருந்தே செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர்.

பின்னர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இருவருக்குமே கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

இதனிடையே, சரக்கு வாகனத்தில் தாயும், மகனும் ஏறிய வீடியோவை அதற்குள் யாரோ சமூகவலைதளத்தில் பரப்பினார்கள்.

அதில் "கொரோனாவால் பாதித்தவர்" என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோ படுவைரலாக பரவியது. இந்த வீடியோவை முஸ்தபா பார்த்ததும் அதிர்ச்சி அடைந்ததோடு மன வேதனை அடைந்தார்.

கொரோனாவே இல்லாத நிலையில் இப்படி ஒரு வீடியோ வந்தது அவமானமாக நினைத்தார்.

அதனால் கடுமையான விரக்தியுடன் மதுரையிலிருந்து நடந்தே திருமங்கலம் வந்தார்.

பின்னர் கப்பலூர் டோல்கேட் தண்டவாளம் அருகே நின்றுகொண்டிருந்தார். எல்லா ரயிலும் ரத்து செய்யப்பட்ட நிலையில், சென்னையிலிருந்து நெல்லை நோக்கி ஒரே ஒரு சரக்கு ரயில் மட்டும் வந்து கொண்டிருந்தது, திடீரென அந்த சரக்கு ரயிலில் பாய்ந்து முஸ்தபா தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் முஸ்தபாவின் சடலத்தை கைப்பற்றிவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்