இந்தோனேசியா பூகம்பம்: 2,000 பேர் நிலச்சரிவில் சிக்கி மாயம்.. வெளியான பகீர் தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே நகரத்தில் மட்டும் சுமார் 2,000 பேர் வரை புதைந்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசிய சுனாமியால் கடுமையாக பாதிப்புக்குள்ளான பலு நகரில் 100 மீற்றர் நீளத்தில் குப்பைகளும் கட்டிட இடிபாடுகளும் மலைபோல் குவிந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

வெள்ளியன்று இரவு கடற்கரை ஆண்டு திருவிழாவில் பங்கேற்றிருந்த ஆயிரக்கணக்கானோர் 20 அடி உயரத்தில் தாக்கிய சுனாமி பேரலைக்கு இரையாகியுள்ளனர்.

பலு நகரம் உருக்குலைந்து காணப்படுகிறது. இதுவரையான ஆய்வுகளின்படி சுமார் 1,203 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மாயமானவர்களின் எண்ணிக்கை பதின்மடங்கு என்பதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சுகாதாரம் மற்றும் மத காரணங்களுக்காக இன்றைய தினமே மீட்கப்பட்டுள்ள உடல்களை குவியல் குவியலாக அடக்கம் செய்துள்ளனர்.

இஸ்லாமிய நாடு என்பதால் மரணமடைந்து ஒரு நாட்களுக்குள் சடலத்தை அடக்க வேண்டும் என்பது அவர்களது மத நம்பிக்கையாகும்.

ராணுவ தளபதி Tiopan Aritonang வெளியிட்ட தகவல்படி, ஒரே ஒரு மருத்துவமனையில் இருந்து மட்டும் சுமார் 545 சடலங்களை ஒரே குழியில் புதைத்ததாக தெரியவந்துள்ளது.

அனைத்து சடலங்களின் புகைப்படங்களையும் அதிகாரிகள் பாதுகாக்க உள்ளனர். தேடி வரும் உறவினர்களுக்கு அது உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி புதைக்கும் முன்னர் ஒவ்வொரு உடலாக பொதுமக்களுக்கு அதிகாரிகளால் காண்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களும் இதுபோன்று சடலங்களை புதைக்க இருப்பதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் மாயமாகியுள்ளதாக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது.

நிலச்சரிவுகளில் சிக்கி Petobo நகரில் 2,000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கடுமையான நிலநடுக்கம் காரணமாக சக்திவாய்ந்த நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Petobo நகரில் இதுவரை மீட்பு நடவடிக்கை முடிவுக்கு எட்டவில்லை எனவும், அங்குள்ள மோசமான சூழல் மீட்பு நடவடிக்கையை தாமதப்படுத்துவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பலு மற்றும் டோங்கலா பகுதியில் மட்டும் ராணுவம், பொலிசார் உள்ளிட்ட 1,300 மீட்பு குழுவினர் துரித நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்