ஹிஜாப்பை கழற்றிய பெண்ணுக்கு கடும் தண்டனை விதித்த நீதிமன்றம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஈரானில் ஹிஜாப்பை கழற்றிவிட்டு அரசுக்கு எதிராக போராடிய பெண் உரிமை ஆர்வலருக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈரானை சேர்ந்த 20 வயதான சபா கோர்ட் அஃப்ஷாரி கட்டாய ஹிஜாப்பிற்கு எதிராக பேசிய, 'white Wednesday' போராட்டக் குழுவின் முக்கிய உறுப்பினராக திகழ்ந்தார். இதில் அவருடைய தாயார் ரஹலேஹ் அஹ்மதியும் கலந்துகொண்டார்.

மற்ற பெண்கள் சட்டத்தை மீறுவதற்கு ஊக்குவிக்கும் விதமாக இந்த ஜோடி தங்களது தலைக்கவசம் இல்லாமல் தெஹ்ரானின் தெருக்களில் சுற்றித் திரியும் வீடியோக்களை வழக்கமாக வெளியிட்டு வந்தனர்.

இதன்காரணமாக ஈரானிய தலைநகரில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அஃப்ஷரி முதலில் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டார் என்று ஈரான் மனித உரிமைகள் கண்காணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரியில் விடுவிக்கப்பட்ட அவர், ஈரானிய ஆட்சியின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இதனால் மீண்டும் ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தெஹ்ரானின் புரட்சிகர நீதிமன்றம் தலைக்கவசத்தை அகற்றியதன் மூலம் விபசாரத்தை ஊக்குவித்ததாகவும், 'அரசுக்கு எதிராக பிரச்சாரம் பரப்புதல்' ஆகிய குற்றங்களின் கீழ் செவ்வாய்க்கிழமை 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதேபோல ஷிமா பாபாய், மொஜ்கன் லாலி, மற்றும் ஷாகேக் மஹாகி ஆகிய மூன்று பெண் உரிமை ஆர்வலர்களுக்கும் திங்களன்று 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்