முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பில் தமிழீழ விடுதலை புலிகள் அறிக்கை வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சில புகைப்படங்கள் வலம்வந்தவண்ணம் உள்ளது.
ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேர் கடந்த 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இதனிடையே, சமீபத்தில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இந்நிலையில், ராஜீவ் காந்தி படுகொலைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சட்டத்துறைப் பிரிதிநிதி லதன் சுந்தரலிங்கம், அரசியற்துறைப் பிரதிநிதி குருபரன் குருசாமி ஆகியோர் கையொப்பம் இட்டுள்ள அந்த அறிக்கையில் திகதி ஏதும் குறிப்பிடவில்லை. ஆகவே இது அதிகாரப்பூர்வமாக தற்போது வெளியிட்ட அறிக்கையா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.