மே.இந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனுக்கு கௌரவ குடியுரிமை வழங்கிய பாகிஸ்தான்!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமிக்கு பாகிஸ்தான் கௌரவ குடியுரிமை வழங்க முடிவு செய்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணியின் பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஆறு பாதுகாப்புப் படையினரும், இரண்டு பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

இந்த பயங்கரமான தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் வாரியம், அங்கு எந்த போட்டியும் நடத்தாமல் இருந்து வந்தது. சர்வதேச அணிகளும் அங்கு செல்ல அச்சம் தெரிவித்து வந்தன. பாகிஸ்தான் தங்களது போட்டிகள் அனைத்தையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தி வந்தது.

அத்தகைய சூழ்நிலையிலும் கூட, 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் துவங்கியதிலிருந்து பெஷாவர் ஜால்மி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் டேரன் சேமி, தொடர்ந்து அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

மேலும், 2017ம் ஆண்டு டேரன் சேமி தலைமையிலான அணி கோப்பையை கைப்பற்றியது.

பாதுகாப்பு காரணங்களுக்காக மற்ற வீரர்கள் அனைவரும் பாகிஸ்தான் செல்ல தயங்கும் நிலையில், டேரன் சேமி தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வருவது மற்ற வீரர்களுக்கும் ஊக்கமளிப்பதாக பாகிஸ்தான் கருதியுள்ளது.

இந்த நிலையில் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் அரசு சார்பில் டேரன் சேமிக்கு கவுரவ குடியுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் மார்ச் 23-ந் திகதி நடக்கும் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி குடியுரிமைக்கான சான்றிதழை வழங்க உள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்