ரமலான் பண்டிகையின் சிறப்புகள் என்ன?

Report Print Kavitha in மதம்

புனித ரமலான் மாதம் முஸ்லிம்களுக்காக அல்லாஹூ தஆலாவினால் வழங்கப்பட்ட மிகப்பெரிய வெகுமதியாகும்.

ஒரு அதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளதாவது. ரமலான் மாதம் எத்தகைய சிறப்புள்ளது என்று மனிதர்கள் விளங்கி விடுவார்களானால் ஆண்டு முழுவதும் ரமலானாகவே இருக்க வேண்டும் என உம்மத்தினர் விரும்புவார்கள், ஆண்டு முழுவதும் நோன்பு நோற்பது சிரமமான காரியம் என்று மக்கள் விளங்குகின்றனர்.

ஆனால் புனித ரமலான் மாதத்தில் கிடைக்கின்ற நன்மைகளைக் கருதி மனிதர்கள் அதனை விரும்புவார்கள் என்பதாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அருளுகிறார்கள்.

ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் வைப்பதும் உள்ளத்தின் அழுக்குகளையும், மனோ ஊசலாட்டங்களையும் நீக்கி விடும் என ஒரு அதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நோன்பினுள் பலவிதமான நோக்கங்களும் பலன்களும் இருக்கின்றன. மார்க்கம் நோன்பை விதியாக்கி இருப் பதில் பலவிதமான பலன்கள் மனிதனுக்கு கிடைக்க வேண்டுமென்பதுதான் நோக்கம், அவை அனைத்தும் கொஞ்சம் பசித்திருக்கும் பொழுதுதான் கிடைக்கப்பெறுகின்றன.

அவற்றில் மிகப்பெரிய பலனாகிய மனோ இச்சையை முறியடித்தல் என்பது சிறிது நேரம் பசித்திருப்பதில்தான் அடங்கியிருக்கிறது.

சைத்தான் மனிதனின் உடலில் ரத்தம் போன்று ஊடுருவி சென்று கொண் டிருக்கிறான். அவனுடைய வழிகளை பசித்திருப்பதின் மூலம் தடை செய்யுங்கள் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள்.

அனைத்து உறுப்புகளின் திருப்தி நஃப்ஸின் பசியில் அடங்கி யுள்ளது. ஏனெனில் நஃப்ஸ் பசித்திருந்தால், உறுப்புகள் அனைத்தும் திருப்தியுற்று அமைதி பெறுகின்றன.

நஃப்ஸ் திருப்தியடைந்தால் இதர உறுப்புகளுக்கு பசியெடுத்து விடுகிறது. (பாவங்கள் செய்ய துடிக்கின்றன) நோன்பினால் மற்றொரு பலன் என்ன வென்றால் ஏழைகளைபோல் பசித்திருந்து அவர்களுடைய நிலைகளை உணர்வதாகும்.

இந்த நோக்கம் மாலை வரை பசி தெரியாமல் இருக்க ஸஹர் நேரத்தில் பால், இனிப்பு வகைகள், ஆகா ரங்கள் ஆகியவற்றை கொண்டு குடலை நிரப்பாமல் இருப்பதில்தான் உண்டாக முடியும்.

ஏழைகளுக்கு ஒப்பாக இருத்தல் என்பது கொஞ்சநேரம் பசித்திருப்பதின் மூலம்தான் சாத்தியமாகும்.

வயிற்றை நிரப்புவது போன்று வேறு எந்தப் பாத்திரத்தையும் நிரப்புவது அல்லாஹூ தஆலாவுக்கு வெறுப்பானதாக இல்லை என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள்.

மேலும் அல்லாஹூ தஆலா புனித ரமலான் மாதத்தில் அர்ஷைச்சுமக்கும் மலக்குகளிடம் உங்களுடைய வணக்கங்களை விட்டுவிட்டு நோன்பாளிகளின் துஆக்க ளுக்கு ஆமின் கூறிக் கொண்டிருங்கள் என்பதாக கூறுகிறார் என ஓர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ரமலான் மாதத்தில் கேட்கப்படும் துஆக்கள் விசேஷமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பது பல அதீஸ்களின் மூலம் விளங்குகிறது.

அல்லாஹூ தஆலாவின் வாக்கும், ரஸூ லுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் உண்மையான அறிவிப்பும் இருக்கும் பொழுது துஆ ஏற்கப் படுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

ஆகவே இந்த புனிதமான ரமலான் மாதத்தின் மார்க்கத்தை கொண்டு நாம் நோற்ற இந்த நோன்பினையும், கொடுத்த ஜகாத்தினையும், செய்த அனைத்து இபாதத்துகளையும், நன்மையான காரியங்களை ஏற்று முழுமையான கூலியை நம் அனைவருக்கும் கொடுத்து அருள்வாராக.

- Maalai Malar

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்