ஐ.நா சபையின் 37வது மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தமிழர் இயக்கம் முன்னெடுத்த செயற்பாடுகள்

Report Print Gokulan Gokulan in சிறப்பு

ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 37வது மனித உரிமைகள் கூட்டத் தொடர் 26.02.2018 – 23.03.2018 வரை இடம்பெற்றிருந்தது.

இக் கூட்டத் தொடரைத் தமிழர் இயக்கமானது, ஐ.நா.மனித உரிமைகள் சபையில் ECOSOC அங்கீகாரம் பெற்ற 14 இணை அமைப்புகளுடன் சேர்ந்து, தாயகம், தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் தேசங்களிலுமிருந்து மனித உரிமை ஆர்வலர்கள், தமிழ் உரிமை ஆர்வலர்கள், பாதிக்கப்பட்ட சாட்சியாளர்கள், மதகுருமார்கள், நீதியரசர்,சட்டவாளர்கள், பேராசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள் போன்றோரை ஒருங்கிணைத்து மிகவும் திறம்பட நடாத்தியிருந்தது.

ஈழத் தமிழர் பிரச்சனையை சர்வதேச அரங்கிலிருந்து இல்லாதொழிக்க ஐ.நா சபையில் பல சதி்த்திட்டங்களை வகுத்துச் செயற்படும் இலங்கை அரசிற்கும், அதற்கு துணைபோகும் இந்தியா, சீனா உள்ளிட்ட மேற்கத்தேய வல்லாதிக்க சக்திகளிற்கும், அவர்களின் நிகழ்ச்சி நிரல்களின் கீழ் அறிந்தும் அறியாததுபோல் இயங்கிக்கொண்டிருக்கும் சில புலம்பெயர், தாயகத் தமிழ் அமைப்புகளிற்கும் மத்தியில் ஈழத்தில் தமிழின அழிப்பே இடம்பெற்றதெனவும், தொடர்ந்தும் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றதெனவும், இதற்கு சர்வதேச நீதி விசாரணையே வேண்டுமெனவும், அத்துடன் தமிழரிற்கு சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தனித் தமிழீழமே ஒரே தீர்வெனவும், இதற்கு சர்வதேச ரீதியாக ஈழத் தமிழரிடையே வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டியதின் அவசியத்தையும் இக் கூட்டத்தில் பங்குகொண்டோர், தமிழரிற்கெதிரான இனவெறிச் சிங்கள அரசின் கடந்த கால வரலாறுகளைப் புள்ளிவிபரங்களுடன் சுட்டிக்காட்டி வாதிட்டிருந்தனர்.

குறிப்பாக தாயகத்தில் வீதியோரங்களில் ஒரு வருடத்திற்கும் மேலாக தொடரும் கட்டமைப்பு ரீதியான தமிழினவழிப்பிற்கு (காணமலாக்கப்பட்டோர், நில ஆக்கிரமிப்பு, தமிழர் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுவதிற்கெதிராக) போராடிக்கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட நேரடிச் சாட்சியாளர்கள் ஐ.நா.மனித உரிமைகள் சபையில் “தமக்கு இலங்கை அரசின் மீதும், அதன் நீதிப் பொறிமுறையின் மீதும் எவ்வித நம்பிக்கையுமில்லையென்பதையும், சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக அவசர அவசரமாக அமைக்கப்பட்ட காணாமற்போனோரிற்கான அலுவலகத்தை தாம் எதிர்ப்பதாகவும், அதில் சென்று சாட்சியம் அளிக்கப் போவதில்லையெனவும், தமக்கு சர்வதேசப் பொறிமுறையுடன் கூடிய ஓர் நீதி விசாரணையே வேண்டுமெனவும்” ஆணித்தரமாக கூறியிருந்தனர்.

மேலும் தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதி விசாரணை கோரியும், ஈழத் தமிழரின் சுய நிர்ணய உரிமையை நிலைநாட்ட சர்வதேச வாக்கெடுப்பு (Referendum) நடாத்தக்கோரியும், இந்திய நீதித்துறையின் நீதியரசர்கள், நீதிபதிகள், சட்டத்தரணிகளை ஒருங்கிணைத்து தமிழர் இயக்கமும், அனைத்துலக தமிழர் பேரவையும் தமிழ் நாட்டில் கையெழுத்து வேட்டை இயக்கமொன்றை நடாத்தியிருந்தது.

இக் கையெழுத்துப் பிரதிகளை ஐ.நா சபையில் கையளிக்க வருகை தந்திருந்த ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் திரு.ஹரி பரந்தாமன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கச் செயலாளர் திரு.கிருஸ்ணகுமார் அவர்களும், பிரதான அவையின் பொது விவாதங்களிலும், பல பக்கவறை நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு சர்வதேச சமூகத்திடம் “குற்றம் புரிந்தவரே தன்னைத்தானே விசாரிக்க அனுமதியளிக்க முடியாதென்பதையும், தமிழினவழிப்பிற்கெதிராக சர்வதேச நீதி விசாரணையையும், ஈழத் தமிழரின் சுய நிர்ணய உரிமையை நிலைநாட்ட தனித் தமிழீழத்தற்கான சர்வதேச வாக்கெடுப்பையும் நடாத்தக்கோரியுமிருந்தனர்”

இக் காலப்பகுதியில் இவர்கள், தமிழர் இயக்கத்தால் நடாத்தப்பட்ட மக்கள் சந்திப்பொன்றிலும் கலந்து கொண்டு, ஈழத் தமிழர் பிரச்சனை சார்ந்து தமது நிலைப்பாட்டையும் அதற்கான எதிர்காலச் செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளித்திருந்தனர்.

பக்கவறை நிகழ்வுகள்

இவ் 37வது ம.உ.கூட்டத்தொடரில் ஈழத் தமிழர் பிரச்சனை சார்ந்து 23 பக்கவறை நிகழ்வுகள் நடாத்தப்பட்டது. இதில் 14 பக்கவறை நிகழ்வுகள் தனித்து ஈழத் தமிழர் பிரச்சனை சார்ந்தும், மிகுதி 9 பக்கவறை நிகழ்வுகளும் எம்முடனிணைந்து தமது சுய நிர்ணய உரிமைக்காகப் போராடும் குர்திஸ்தான், மேற்கு சகாரா, காஷ்மீர், தெற்கு யெமன் போன்றோருடனிணைந்தும் பல்வேறு தலைப்புகளின் கீழ் நடாத்தப்பட்டது.

(உ+ம்) தமிழின அழிப்பு,வலிந்து காணாமலாக்கப்பட்டோர்,நில ஆக்கிரமிப்பு, இராணுவமயமாக்கலின் கீழ் சிறுவர்கள், மாணவர்கள், பெண்களின் உரிமைகள், சுய நிர்ணய உரிமை போன்றன.

இவ் வருடம் கத்தலோனியா நாட்டினரும் எமக்கு ஆதரவு தெரிவித்து இருந்ததுடன், தொடர்ந்து எம்முடனிணைந்து செயற்படவும் விருப்பம் தெரிவித்திருந்தனர்.அவர்களிற்கு ஐ.நா வில் பதியப்பட்ட ECOSOC அங்கீகாரமுள்ள எமது அமைப்புகளினூடாகப் பக்கவறை நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

இவ் எமது பக்கவறை நிகழ்வுகளில் தமிழினவழிப்பில் நேரடியாகத் தொடர்புடைய 50ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கலந்து கொண்டு பல குழப்பங்களை ஏற்படுத்தியிருந்தனர். எனினும் தமிழர் தரப்பினால் அவர்களிற்குச் சரியான பதில்களும் வழங்கப்பட்டிருந்தன. இச் செயற்பாடு இனவெறிச் சிங்கள அரசின் கோர முகத்தை மீண்டுமொருமுறை சர்வதேசத்திற்குக் காட்டுவதாக அமைந்திருந்தது.

இக் கூட்டத்தொடரில் பங்குபற்ற ஈழத்திலிருந்து வரவிருந்த பாதிக்கப்பட்ட சாட்சியாளர்களிற்கு விசா மறுக்கப்பட்டது தொடர்பாக நாம் சுவிஸ் வெளிவிவகார அமைச்சர், அவரது செயலாளரைத் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தியிருந்தோம்.

மேலும் இவ் விடயம் தொடர்பாகவும், தமிழினவழிப்பில் ஈடுபட்ட 50ற்கும் மேற்பட்ட இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட விசா தொடர்பாகவும் பக்கவறை நிகழ்வுகளிலும், பிரதான அவையின் பொது விவாதத்திலும் பல தடவைகள் பேசியிருந்தோம். அதன் பின்னர் சுவிஸ் தூதுவராலயத்தின் அதிகாரி ஒருவர் எமது ஒருங்கிணைப்பாளருடன் தொடர்புகொண்டு எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாதெனத் தெரிவித்திருந்தார்.

வாய்மூல அறிக்கைகள்

இவ் 37வது கூட்டத்தொடரில் மனித உரிமைகள் சபையின் பிரதான அவையின் பொது விவாதத்தின் போது அலகு 2 – அலகு 10 (Item2- Item 10) வரையான பிரிவுகளின் கீழ் எல்லாமாக 84 வாய்மூல அறிக்கைகள் வாசிக்கப்பட்டன.

அலகு 6ன் கீழ் நாடுகள், அவைகளின் மனித உரிமைகளின் நிலைப்பாடுகள் தொடர்பாக 4 வருடத்திற்கொருமுறை பூகோள கால ஆய்வுக்குட்படுத்தப்படும் (Universal Periodic review). அவ்வகையில் இவ் வருடம் இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடுகள் சார்ந்து ஆய்விற்குட்படுத்தப்பட்டு அதன் மீதான விவாதங்கள் இடம் பெற்ற போது, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் போர்க்குற்ற விசாரணை, காணமலாக்கப்பட்டோர், நிலவிடுவிப்பு போன்ற விடயங்களில் கால இழுத்தடிப்பு, நம்பகத் தன்மையற்ற செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை அரசின் மீது சர்வதேச நாடுகளால் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இது சர்வதேச அரங்கில் இலங்கைக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.

எழுத்து மூல அறிக்கைகள்

ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் விவாதிக்கப்படும் மேற்கூறப்பட்ட அலகு2-10 பிரிவுகளின் கீழும் கடந்த இருவருடத்திலிருந்து இவ் 37 வது கூட்டத்தொடர் வரை 110 எழுத்துமூலமான அறிக்கைகள் அது சார்ந்த துறைசார் நிபுணர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இக் கூட்டத்தொடரில் மனித உரிமை ஆணையாளருடனான கூட்டத்தின் போது இலங்கை அரசின் தமிழரிற்கான நீதி விசாரணை மறுக்கப்படல்,கால இழுத்தடிப்பு,காணமலாக்கப்பட்டோர் விவகாரம்,அரசியற் கைதிகளின் விடுதலை,நில ஆக்கிரமிப்பு …. தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்ட போது அவரால்; இலங்கை அரசு 30/1 தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்தாது காலதாமதம் செய்வது கவலையளிப்பதாகவும், இவ் விடயத்தில் பாதிக்கப்பட்ட உங்களின் பக்கமே நாம் நிற்கின்றோம் என்றும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தற்போது நாட்டில் முஸ்லிம்களிற்கெதிராக நிலவும் இனக்கலவரங்களை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

எனினும் அவரது வருடாந்த அறிக்கையில் இலங்கை அரசின் மீது; இன மத வன்முறைகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், மனித உரிமைகள் பெரிதும் மீறப்படும் நாடு என வெளிப்படையாகப் பல குற்றச் சாட்டுகளைச் சுமத்தியிருந்தார்.

அத்துடன் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் கூடிய நீதி விசாரணையை இலங்கை அரசு மேற்கொள்ளாதவிடத்து, நீதிகாண்பதற்கான உலகளாவிய அங்கீகாரமுள்ள ஓர் ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறு அங்கத்துவ நாடுகளைக் கோருவதுடன், அவைகளில் சர்வதேச நீதிவிசாரணையுமொன்றெனச் சுட்டிக்காட்டியுமிருந்தார்.

மேலும் தமிழர் இயக்கப் பிரதிநிதிகளும், ஏனைய செயற்பாட்டளர்களும் பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக பல உயர்மட்ட சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தனர்.

(உ+ம்) காணமலாக்கப்பட்டோர், அரசியற் கைதிகள், அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்கள் விவகாரம், தமிழீழ வெளியுறவுக் கொள்கை வகுத்தல்.

இச் சந்திப்புக்கள் வெளியுறவுத்துறை அமைச்சர்கள்,அவரது குழுவினர்கள், ஐரோப்பிய பாராளுமன்ற மனித உரிமைக் குழுவினர், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளிற்கான அமைப்பு, அரச சார்பற்ற சர்வதேச அமைப்புகள் போன்றோருடன் இடம்பெற்றிருந்தன.

ஐரோப்பிய பாராளுமன்ற மனித உரிமைக் குழுவினருடனான சந்திப்பில் இலங்கையில் போரிற்குப் பின்னான இவ் 9 வருட காலப்பகுதியில் மனித உரிமை நிலைமைகள், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், அரசியற் கைதிகளின் விடுதலை,நில ஆக்கிரமிப்பு போன்ற அடிப்படை விடயங்களில் எவ்வித முன்னேற்றமும் இடம்பெறவில்லையென்பதை தெளிவுபடுத்திக் கூறினோம்.

இவ்வாறாக GSP+ வரிச்சலுகை வழங்கத் தேவையான அடிப்படை நிபந்தனைகள் எதையுமே கடைப்பிடிக்காத இலங்கை அரசிற்கு இவ் GSP+ வரி விலக்களித்தது தமிழர் எமக்கு ஏமாற்றமளிப்பதாகச் சுட்டிக்காட்டியிருந்தோம்.

அத்துடன் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு விரைவான தீர்வைக்காண ஐரோப்பிய பாராளுமன்ற அமர்வுகளில் அழுத்தங்களைக் கொடுக்குமாறும், அங்கு இலங்கை சார்ந்து தீர்மானங்கள் எடுக்கும்போது வலிமையான உறுதியான முடிவுகளை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டோம்.

- தமிழர் இயக்கம்

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்