சுவிஸ் கிராமத்தை நோக்கி படையெடுக்கும் அட்டைப்பூச்சிகள்: தவிக்கும் கிராம மக்கள்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் கிராமமான Erstfeldஐ நோக்கி மரவட்டைகள் என்று அழைக்கப்படும் அட்டைப்பூச்சிகள் படையெடுத்துள்ள சம்பவம் மக்களுக்கு பெரும் தொல்லையாக உருவெடுத்துள்ளது.

காலையில் கதவைத் திறந்தால் வீட்டைச் சுற்றி கால் வைக்க முடியாத அளவுக்கு நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான என்று கூட சொல்லலாம், எங்கும் ஒரே அட்டைப்பூச்சிகள்தான்.

Cencig என்பவர் தனது வீட்டு வாசலில், ஒட்டும் டேப்களை தினமும் ஒட்ட வைத்து விடுவது வழக்கமாகிவிட்டது.

காலையில் எழுந்து பார்க்கும்போது அந்த டேப் முழுவதும் நூற்றுக்கணக்கான அட்டைப்பூச்சிகள் ஒட்டியிருக்கும்.

கேஸ் அல்லது விஷ திரவத்தைத் தெளித்து அவற்றை அவர் கொல்வதாகக் கூறுகிறார். சிலர் வீட்டு ஜன்னல்கள் மற்றும் கதவுகளை எப்போதும் மூடியே வைத்திருக்கிறார்கள்.

இந்த அட்டைப்பூச்சிகள் எங்கிருந்து வந்தன என்பது பெரும் கேள்விக்குறியாகி விட்டது, காரணம் பொதுவாக இவ்வகைப் பூச்சிகள் மக்கிய பொருட்கள் மீதுதான் வாழும்.

அதனால் இவை ஏன் ஊருக்குள் வந்தன என்பது புரியவில்லை. இவற்றால் மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றாலும் அவற்றைக் கொல்லும்போது அவை ஒரு துர்நாற்றம் வீசும் திரவத்தை வெளியிடுகின்றன.

பின்னர் அவை இருந்த இடத்தை சுத்தம் செய்வது குமட்டலை உண்டாக்கும் கடினமான செயலாகி விடுகிறது.

இதற்கிடையில் பூச்சியியல் நிபுணர்கள் இவற்றால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், அவை ஓராண்டு மட்டுமே வாழக்கூடியவை என்பதால் வந்தது போலவே காணாமல் போய்விடும் என்கின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்