தூக்கத்தில் இருந்த சகோதரனை கொல்ல முயன்ற சுவிஸ் இளைஞர்: பெற்றோர் படுகாயம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் மண்டலத்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் சகோதரர் மற்றும் பெற்றோரை கொடூரமாக தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிறன்று நடந்த இச்சம்பவம் தொடர்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில் துரிதமாக செயல்பட்ட பொலிசார், அன்றைய தினமே 22 வயதான அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

தற்போது அந்த விவகாரம் தொடர்பாக மேலதிக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தொடர்புடைய இளைஞர் மீது திட்டமிட்ட கொலை முயற்சி மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர்.

மட்டுமின்றி கைது செய்யப்பட்டுள்ள அந்த இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று தூக்கத்தில் இருந்த தமது சகோதரரை குறித்த 22 வயது இளைஞர் திடீரென்று கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த தாயார் பதற்றமடைந்து அந்த இளைஞரை தடுக்க முயன்றுள்ளார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மனைவியின் அலறல் கேட்டு சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த கணவருக்கும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ள மூவரும் தற்போது ஆபத்து கட்டத்தை தாண்டியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

22 வயதான அந்த இத்தாலியர் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல எனவும்,

2017 ஆம் ஆண்டு பொலிஸ் நடவடிக்கையில் இருந்து தப்பியுள்ளதும், ஒருமுறை பொலிஸ் அதிகாரி ஒருவரின் மண்டையை பிளந்ததும், அவரை குற்றுயிராக விட்டுச் சென்ற வழக்கிலும் இவர் சிக்கியுள்ளார்.

ஆனால் அந்த வழக்குகளில் இவர் தண்டிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. தற்போது சொந்த சகோதரரை கொல்ல முயன்ற வழக்கில் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்