விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட பிரித்தானியர்: கமெராவுடனேயே வாழும் சோகம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

விசித்திர நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால், காலையில் எழுந்ததிலிருந்து தான் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கமெராவில் பதிவு செய்தபடியே வாழும் கட்டாயத்தில் வாழ்கிறார் ஒரு பிரித்தானியர்.

லிவர்பூலைச் சேர்ந்த Connor (27), ஒரு வருடமாக வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை.

காரணம், அவர் தான் யாரோ ஒருவரை கொலை செய்துவிட்டதாக நினைக்கிறார். ஆனால் உண்மையில் அவர் யாரையும் கொல்லவில்லை.

அதை உறுதிசெய்துகொள்வதற்காக அவர் வீட்டுக்குள்ளேயே பதுங்கியிருக்கிறார். அது அவருக்கு ஏற்பட்டுள்ள விசித்திர நோயின் தாக்கம்.

நான்கு வயதாக இருக்கும்போது தொடங்கிய அந்த பிரச்னை, வயது ஏற ஏற அதிகரித்துக்கொண்டே வந்தது.

கார் ஓட்டும்போது கார் சிறு கல்லின்மீது ஏறிவிட்டால், ஒருவேளை தான் யாரையாவது கார் ஏற்றிக் கொன்றுவிட்டோமோ என்று எண்ணி திரும்ப காரை ஓட்டிச் சென்று அந்த இடத்தை சோதித்துப்பார்ப்பார் Connor, மீண்டும் மீண்டும்...

ஒரு நாள் தனது காதலியுடன் ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும்போது, பக்கத்தில் புதர்கள் நிறைய இருந்திருக்கின்றன.

புதரைப் பார்த்ததும் அங்கு யாரோ ஒரு பெண்ணை சிலர் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதாக கற்பனை செய்துகொண்டு பயந்து அழ, அவரது காதலி அவரை பிரிந்துசென்றுவிட்டார்.

இப்படியே அனுதினமும் ஏதாவது எண்ணங்கள், வன்முறை, பாலியல் எண்ணங்கள் என எப்போதும் மனதுக்குள் ஒரே போராட்டம்.

தான் மோசமானவன், தன்னால் மற்றவர்களுக்கு மோசமான விடயங்கள் நடக்கும் என்ற எண்ணங்கள் ஏற்பட, தான் யாரையும் எதுவும் செய்யவில்லை என்பதை உறுதி செய்வதற்காக பல மாதங்கள் வீட்டுக்குள்ளேயே பதுங்கிவிடுவார் Connor.

ஆனால் மன நல மருத்துவர் ஒருவர் கூறும்போது, நீங்கள் ஒரு அமைதியை விரும்பும், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையுடையவராக இருக்கும்போது, உங்களுக்கு இதுபோன்ற மோசமான வன்முறையான எண்ணங்கள் தோன்றும்.

ஆனால் Connorஐப் போன்று பிரச்னை உடையவர்கள் இத்தகைய எண்ணங்களால் தாங்களைத்தாங்களே அவமானத்திற்குரியவர்களாக பார்க்கத்தொடங்கிவிடுவார்கள் என்கிறார்.

தனது பிரச்னைகளை Connor தனது தாயிடம் சொல்லி அழ, அவர் அதற்கு ஒரு நல்ல யோசனை சொல்லியிருக்கிறார்.

அதன்படி, வீடு முழுவதும், வீட்டைச் சுற்றியும், Connorஇன் காரிலும் ஏராளம் CCTV கமெராக்களை பொருத்தியுள்ளார்கள்.

அத்துடன் அவர் காரில் செல்லும்போதும், காரில் ஒரு கமெரா பொருத்தப்பட்டிருப்பதுடன், தன்னை தனது மொபைல் போன் மூலமும் வீடியோ எடுத்தபடியே பயணிக்கிறார் Connor.

அந்த காட்சிகளை தினமும் போட்டு பார்த்துக்கொள்வதன்மூலம், தான் யாரையும் தாக்கவில்லை என்பதை அவர் உறுதி செய்துகொள்கிறார்.

தற்போது காந்த அலைகளை பயன்படுத்தி மூளையின் ஒரு பகுதிக்கு அதீத எண்ணங்கள் செல்வதை கட்டுப்படுத்தும் ஒரு சிகிச்சையை Connorக்கு தொடங்கியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்த சிகிச்சை பலனளித்தால் மீண்டும் ஒரு சாதாரண வாழ்வை தொடங்குவேன், காதலிப்பேன், நல்ல வேலைக்கு செல்வேன் என்று கூறும் Connor, அது பலனளிக்கவில்லையென்றால் வாழ்ந்து பயனில்லை பேசாமல் தூங்கிவிடுவேன் என்று என் அம்மாவிடம் கூறியிருக்கிறேன் என்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers