பாகிஸ்தானில் கடும் புயல்... வில்லியம்-கேட் பயணிக்கும் விமானம் நடுவானில் திணறல்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான புயல் காரணமாக வில்லியம் - கேட் ஆகியோரை ஏற்றிச் செல்லும் விமானம் இஸ்லாமாபாத்தில் இறங்குவதை கைவிட்டு லாகூருக்கு திரும்பியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் வில்லியம் அவருடைய மனைவி கேட் உடன் 5 நாள் சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார்.

இவர்கள் இருவரும் பிரித்தானிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வாயேஜர் விமானத்தில் ஒவ்வொரு நாளும் பாக்கிஸ்தானைச் சுற்றி பறந்து வருகின்றனர்.

இன்று முன்னதாக, வில்லியம் மற்றும் கேட் ஆகியோர் லாகூரில் உள்ள பாட்ஷாஹி மசூதி புனித தளத்திற்கு சுற்றுப்பயணம் சென்று, அங்கிருந்த அறிஞர்கள் மற்றும் மதகுருக்களை சந்தித்து பேசினர். அதன்பிறகு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் கிரிக்கெட் அகாடமிக்கு சென்று பார்வையிட்டனர்.

இதனையடுத்து விமானம் லாகூரில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டது. 30 நிமிட பயணத்தில் கடைசி 10 நிமிடம் இருக்கும் போது, கடும் புயல் மற்றும் மின்னல் விமானத்தின் வலது புறத்தில் தாக்க ஆரம்பித்துள்ளது.

இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விமானம் வானத்திலே வட்டமிட்டு கொண்டிருந்துள்ளது. மின்னல் மற்றும் கொந்தளிப்பின் மத்தியில் பைலட், பாகிஸ்தான் விமானப்படை தளமான நூர் கான், ராவல்பிண்டி ஆகிய இரண்டு விமான நிலையங்களில் தரையிறங்க முயன்றார்.

ஆனால் அது தோல்வியை தழுவியதை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக மீண்டும் லாகூர் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இளவரசர் வில்லியம், அனைவரும் நலமாக இருப்பதை உறுதி செய்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்