லண்டனில் தஞ்சம் அடைந்திருக்கும் கோடீஸ்வரர் விஜய் மல்லையா கடன் தொகையை வட்டியும் முதலுமாக சேர்த்து 13,960 கோடி ரூபாய் கட்டுவதற்கு தயராக இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மதுபான ஆலை, விமான நிறுவனம் என பல்வேறு தொழில்கள் நடத்தி வந்த விஜய் மல்லையா இந்தியாவில் இருக்கும் பல பொதுத்துறை வங்கிகளில் 9000-க்கும் கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று செலுத்தவில்லை.
இதனால் அவர் பிரித்தானியாவின் தலைநகரான லண்டனுக்கு தப்பிச் சென்றார். இதையடுத்து, இவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது.
இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, லண்டன் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இருந்தது.
இவர் மீது சிவப்பு எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது. வெளிநாட்டிற்கு தப்பி ஓடியவர் என்று குறிப்பிட்டிருந்தது. அடைக்கலம் கேட்டால் கொடுக்க கூடாது என்று பிரித்தானியர அரசிடம் இந்திய அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்நிலையில் வங்கியில் வாங்கிய 9000 கோடியை வட்டியுடன் சேர்ந்து 13,960 கோடியாக வங்கிகள் கூட்டமைப்பில் செலுத்தி விடுவதாக இவரது வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே முன்பு கடந்த மாதம் மனு தாக்கல் செய்து இருந்தார்.
நேற்றும் இதே கோரிக்கையை இவரது வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வைத்துள்ளார்.
இது குறித்து சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், விஜய் மல்லையா இதுபோன்று அடிக்கடி கூறி வருகிறார்.
இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு முதலில் அவர் இந்தப் பணத்தை டெபாசிட் செய்யட்டும் என்று தெரிவித்துள்ளார்.
விஜய் மல்லையா விரைவில் இந்தியா கொண்டு வரப்படுவார் என்று சூசகமாக மேத்தா தெரிவித்துள்ளார்.
தன்னை இந்தியா கொண்டு வருவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று லண்டனின் பல்வேறு நீதிமன்றங்களில் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், அவர் இந்தியா கொண்டு வரப்படலாம் என்று நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.